லாகூர் : பாகிஸ்தானில், 37 ஆண்டுகளுக்கு முன் அரசு நிலத்தை லஞ்சமாக வழங்கியது தொடர்பான வழக்கில் இருந்து அந்நாட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் விடுவிக்கப்பட்டார்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், 1986ல் அந்நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் முதல்வராக இருந்தார்.
லாகூர் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவராகவும் இருந்த அவர், அரசுக்கு சொந்தமான 6.75 ஏக்கர் நிலத்தை, தன் அதிகாரத்தை பயன்படுத்தி குறைந்த விலைக்கு ஜாங் – ஜியோ ஊடக குழும உரிமையாளரான ஷகில் – உர் – ரகுமானுக்கு வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பான வழக்கு லாகூர் விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இந்த வழக்கில் இருந்து நவாஸ் ஷெரீப் நேற்று விடுவிக்கப்பட்டார்.
‘சமீபத்தில் பாக்., அரசு மேற்கொண்ட சட்டத்திருத்தத்தின்படி, இந்த வழக்கு எங்கள் விசாரணை வரம்புக்குள் வராது’ என ஊழல் தடுப்புப் பிரிவு தெரிவித்ததை அடுத்து, அவரை விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அரசியல்வாதிகள், ஆயுட்காலம் முழுதும் தேர்தலில் போட்டியிட விதிக்கப்படும் தடையை நீக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் நவாஸின் சகோதரரும், அந்நாட்டு பிரதமருமான ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு சமீபத்தில் திருத்தம் மேற்கொண்ட நிலையில், வழக்கில் இருந்து நவாஸ் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, நவாஸ் ஷெரீபை தகுதி நீக்கம் செய்து கடந்த 2017ல் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது, குறிப்பிடத்தக்கது.
நவாஸ் ஷெரீப்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement