Robo Shankar – மது பழக்கத்துக்கு அப்பா அடிமையாக இருந்தார்.. மனம் திறந்த ரோபோ சங்கர் மகள்

சென்னை: Robo Shankar (ரோபோ ஷங்கர்) தனது தந்தை மது பழக்கத்துக்கு சில மாதங்கள் அடிமையாக இருந்தார் என ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா தெரிவித்திருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் ரோபோ சங்கர். மாரி படத்தின் மூலம் பெரிய திரையில் தோன்றிய அவர் தொடர்ந்து ரஜினி, அஜித்,தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். மேலும் பல படங்களில் நடிப்பதற்கும் அவர் கமிட்டாகியிருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சமீப காலமாக ஓய்வில் இருந்தார். இதன் காரணமாக கோலிவுட்டில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. மேலும் ரோபோ ஷங்கருக்கு என்ன ஆயிற்று எனவும் பலர் கேள்வி எழுப்பினர்.

உடல்நிலை: ரோபோ சங்கருக்கு குடிப்பழக்கம் அதிகம் இருந்ததாகவும் அதனால்தான் அவரது உடல் உருக்குலைந்துவிட்டதாகவும் சர்ச்சைக்குரிய பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து ரோபோ ஷங்கர் விரைவில் உடல்நலம் தேறி மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தனர்.

மஞ்சள் காமாலை: இந்தச் சூழலில் தனக்கு மஞ்சள் காமாலை வந்துவிட்டதாக சங்கர் ஒத்துக்கொண்டதை அடுத்து குடியால்தான் மஞ்சள் காமாலை வந்தது என பலரும் பலமாகவே பேச ஆரம்பித்தனர். ஆனால், இது எல்லோருக்கும் வரும் நோய்தான். எனக்கு இந்த நோய் சிறு வயதில் ஏற்கனவே ஒருமுறை வந்திருக்கிறது. இந்த நோய் எனக்கு மீண்டும் வந்ததன் மூலம் எனது கதை முடிந்துவிட்டதாகவே பலரும் நினைத்தனர் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வேதனையுடன் கூறியிருந்தார்.

குடி பழக்கம்: இந்நிலையில் ரோபோ சங்கரின் மகளும், நடிகையுமான இந்திரஜா சமீபத்தில் அளித்த பேட்டியில்,”கடந்த சில மாதங்களாகவே எனது அப்பா மதுப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்தார். இதனால் அவருக்கு உடல்நிலை பாதிப்பு அதிகமாக ஏற்பட்டு விட்டது. இப்போது மதுப்பழக்கத்தில் இருந்து மீண்டு புதிய வாழ்க்கையை அப்பா வாழ்ந்து வருகிறார். இதுபோன்ற பழக்கங்களை இளம் தலைமுறையினர் தவிர்க்க வேண்டும்” என்றார்.

திருமணம்: இதற்கிடையே ரோபோ சங்கரும் அவரது மனைவியும் அளித்த பேட்டி ஒன்றில், ‘எனது மகள் இந்திரஜாவுக்கு 21 வயது ஆகிறது. அவருக்கு திருமணம் முடிவு செய்திருக்கிறோம். எங்கள் உறவிலேயே மாப்பிள்ளை பார்த்திருக்கிறோம். அவரும் சினிமாவில்தான் இருக்கிறார். கார்த்திக் சுப்புராஜிடம் உதவி இயக்குநராக இருக்கும் அவர் சில ஹீரோக்களிடம் கதையும் சொல்லிவருகிறார்.

இந்திரஜாவிற்கு ஓகேதான்: இந்திரஜாவிடம் இந்தத் திருமணத்திற்கு சம்மதமா என கேட்டோம். அதற்கு அவர், சம்மதம் என தெரிவித்துவிட்டார்.அதுமட்டுமின்றி என்னை அவர் நன்றாகவே புரிந்துகொண்டார். அதனால் எனக்கு ரொம்பவே சம்மதம் என தெரிவித்துவிட்டார். விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது. நாங்களே அதுகுறித்து அறிவிப்போம்” என தெரிவித்திருந்தார்கள். இந்திரஜா பிகில், விருமன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.