பங்குச் சந்தை எவ்வளவு உயர்ந்துவிட்டது… இன்னும் உயருமா? #பொருளாதாரம், பணம், பங்கு-9

கொடுக்கும்போது கூரையைப் பிடித்துக்கொண்டு கொடுக்கும் என்பார்கள் இந்திய பங்குச் சந்தையின் நிலை இப்போது அப்படித்தான் இருக்கிறது.

2008-ஆம் ஆண்டு 21,000 புள்ளிகள் போனபின் பொருளாதாரச் சிக்கல் காரணமாக விழுந்த உலக பங்குச் சந்தைகளுடன் இந்திய பங்குச் சந்தையும் வீழ்ந்தது. பின்பு தொடர்ந்து சரிந்து ஒரு நேரம் சென்செக்ஸ் 8,000 புள்ளிகள் என்கிற அளவிற்கே போய்விட்டது.

அதன்பிறகு எங்கே, எந்த ஊருக்கு கூட்டத்திற்குப் போனாலும் முதலீட்டாளர்கள். குறிப்பாக, சிறு முதலீட்டாளர்கள் தவறாமல் ஒரு கேள்வி கேட்பார்கள். ”மீண்டும் 21,000 புள்ளிகள் வருமா?’’ கூடவே ஒட்டிக்கொண்டு வரும் ஒரு துணைக் கேள்வி, ”எப்போது வரும்?”

பங்குச் சந்தை

அதிகம் இல்லை. அடுத்த 15 ஆண்டுகளில் இப்போது சென்செக்ஸ் 63 ஆயிரம் புள்ளிகளைத் தொட்டு நிற்கிறது. அப்போதைய உச்சத்தைப் போல, மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. விழுந்த பாதாளமான 8000 புள்ளிகளில் இருந்து கணக்கிட்டால், ஏழரை மடங்கு.

’இப்படிக் கொட்டிக் கொடுக்க வேறு எந்த சந்தையால் முடியும்?’ என்று கேட்க வைக்கும் அளவு உயர்ந்திருக்கிறது.

கொரோனா பரவல், அதன் விளைவாக ஊரடங்கு போன்றவற்றால் உலகம் பயந்துபோனதைவிட, முதலீட்டாளர்கள் அதிலும் குறிப்பாக, பெரும் முதலீட்டாளர்கள் அதிகம் பயந்தது போனார்கள். நாளை என்று ஒன்று இல்லாததைப் போல பங்குகளை விற்றுத் தள்ளினார்கள். விட்டு விலகி ஓடினார்கள். விளைவு?

சென்செக்ஸ் 40,000 அளவில் இருந்து 26 ஆயிரத்துக்கும்கீழே போனது. எந்த நல்ல நிறுவனம் பங்கிற்கும் மதிப்பில்லாத நிலை. முடிந்தது கதை என்றுதான் எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அதிலிருந்து மிக வேகமாக குதித்தெழுந்து

இப்போது ஜூன் 2023-ல் 63 ஆயிரம் புள்ளிகளில் நிற்கிறது. அதாவது, 39 மாதங்களில் 37,000 புள்ளிகள் உயர்வு.

பங்குச் சந்தை

இப்போதும் சிறு முதலீட்டாளர்கள் கேள்வி கேட்கிறார்கள். அந்தக் கேள்வி ”பங்குச் சந்தை இவ்வளவு உயர்ந்துவிட்டதே… இனியும் உயருமா?’’ என்று.

பங்குச் சந்தை குறியீட்டு எண் சார்ட்டைப் பார்த்தால் அது செங்குத்தாக உயர்ந்திருப்பது தெரிகிறது. மிகச் சிறிய இறக்கங்கள் தவிர, மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து ஏற்றம்தான்.

இனி பங்குச் சந்தையானது தொடர்ந்து இந்த உயரத்தில் நின்றுகொண்டிருக்கவோ அல்லது அங்கிருந்து மேலே தொடர்ந்து போகவோ எவை காரணங்களாக இருக்கும்?

என் அனுபவத்திலிருந்து சொல்வதென்றால், இப்படி சொல்லலாம்.

1.  உலக அமைதியை, உலகப் பொருளாதாரத்தைக் கெடுக்கும் விதம் செய்திகள் வரக் கூடாது.

2. நாட்டின் அமைதிக்கும், பொருளாதாரத்திற்கும் கேடு உருவாக்கும் செய்திகள் வரக்கூடாது.

3. மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் இரண்டும் வருமோ என்ற சந்தேகமோ, அச்சமோ முதலீட்டாளர்களுக்கு ஏற்படக்கூடாது. அதற்கான சூழ்நிலை உருவாகக்கூடாது.

4. முதலீட்டாளர்களின் வசம் பணம் இருந்துகொண்டே அல்லது அவர்களுக்குப் பணம் வந்துகொண்டே இருக்கவேண்டும்

5. அதிகம் முதலீடு செய்யும் பங்குகளின் மற்றும் சந்தைக் குறியீட்டு எண்களின் பிரைஸ் எர்னிங் மல்டிபிள் (PE Multiple) கட்டுக்குள் இருக்க வேண்டும். தவிர, அதன் அளவுக்கேற்ற வகையில் நிறுவனங்களின் சம்பாத்தியம் தொடர உயர வேண்டும்.

பொருளாதாரம்

இவை ஐந்தும் சரியாக இருக்கும்பட்சம், சந்தையின் உயர்வு நிலைக்கும். தொடர்ந்து மேல் நோக்கிக்கூட போகலாம். ஆனால், இவற்றில் எது மாறினாலும், சந்தை இறங்கும்.

ஆனால், இந்த ஐந்து விஷயங்களும் நிச்சயம் நடக்கும் என்று எவராலும் உத்தரவாதம் கொடுக்க முடியாது. முன்கூட்டியே சரியாக கணிக்கவும் முடியாது.

அதனால், குறிப்பிட்ட அளவு அல்லது கணிசமான அளவு லாபம் இருந்தால் அதை எடுத்துவிடலாம். சந்தை இறங்குவதற்காக காத்திருக்கலாம். அல்லது குறைந்தபட்சம் தனது மொத்த முதலீட்டின் (போர்ட்போலியோவின்) ஒரு பகுதியை மட்டுமாவது விற்று லாபத்தை பதிவு செய்யலாம்.

அதன்பிறகு, பங்குச் சந்தை இறங்கினால்? ஓரளவு விற்றாயிற்று என்கிற திருப்தியுடன் இருக்கலாம்.

பங்குச் சந்தை தொடர்ந்து உயர்ந்தால்?

மொத்தத்தையும் விற்றுவிடவில்லையே என்கிற திருப்தியுடன் இருக்கலாம்.

பங்குச் சந்தை

ஆனால், ஒன்று நிச்சயம். பங்குச்சந்தை முதலீடு என்பது குறுகிய காலத்துக்கானதல்ல. அது நீண்ட காலத்திற்கானது. 15, 20 ஆண்டுகளுக்குமுன்பு 20 ரூபாய், 30 ரூபாய் என்று விற்ற பங்குகள் இன்று 3000 ரூபாய், 4000 ரூபாய் என்று விலை நடக்கின்றன. எல்லாப் பங்குகளும் அப்படிப் விலை உயர்ந்துவிடவில்லை. வாய்ப்புள்ள வியாபாரங்களை திறமையாக நிர்வாகம் செய்யும் நிறுவனப் பங்குகள் தான் அவ்வாறு கொட்டிக்கொடுத்துக்கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட நல்ல நிறுவனப் பங்குகளை வாங்குவதும் அவற்றை தொடர்ந்து வைத்திருப்பதுமே செல்வம் சேர்க்கும் வழி.

விலை உயரும் போது விற்றுவிடுவதும் இறங்கினால் வாங்குவதும் டிரேடிங் முறையில் பணம் சம்பாதிப்பது. நல்ல நிறுவனப் பங்குகளை சிறிய அளவுகளில் தொடர்ந்து வாங்குவதும், விலை மாற்றங்களுக்கு பயந்து விற்றுவிடாமல் வைத்திருப்பதும் நீண்டகாலத்தில் செல்வம் சேர்க்கும் வழி.

அப்படிப்பட்டவர்கள் இப்போது பங்குச் சந்தை உச்சத்தில் இருக்கிறதா, இன்னும் இறங்குமா என்பது குறித்தெல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை…!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.