'தண்டட்டி'யில் நான் அப்பத்தா… : நடிகை ரோகிணி ஹேப்பி

தமிழ் சினிமாவில் பார்த்து ரொம்ப நாள் ஆச்சே… என்ன கேரக்டர் கொடுத்தாலும் சூப்பரா நடிச்சு ஒரு கலக்கு கலக்கு வாங்களே…. எங்கே போனாங்க என ரசிகர்கள் தேடும் நடிகைகளில் ஒருவரான நடிகை ரோகிணி, தான் நடிக்கும் 'தண்டட்டி' படம் குறித்து மனம் திறக்கிறார்…

'தண்டட்டி' படத்தில் நடித்ததில் கிடைத்த அனுபவம்?
தண்டட்டி அணிந்த அப்பத்தா கேரக்டரில் நடித்தது புது அனுபவம். இந்த படத்தில் கிராமத்து அப்பத்தாவின் அட்டகாசம், நக்கல், நையாண்டி, கோபம் எல்லாமே பார்க்க முடியும். அப்பத்தாவாகவும், பசுபதி உடன் நடித்ததில் சந்தோஷம்.

அப்பத்தா தோற்றம்?
இயக்குனர் மதுரை என்பதால் அந்த அப்பத்தாக்கள் கூடவே வாழ்ந்திருக்காரு. அவர் வாழ்வில் இருந்து பல விஷயங்களை எடுத்திருக்காரு. கருப்பாக, வயதான தோற்றம் என இது மாதிரி ஒரு வாழ்வியல் கதையில் இதுவரை நடித்ததில்லை. இயக்குனர், தயாரிப்பாளர் கார்த்தி என்னை நம்பி கேரக்டர் கொடுத்திருக்காங்க.

அப்பத்தாக்கள் கூட சூட்டிங் ஸ்பாட்ல எப்படி பழகுவீங்க?
அவங்க ரொம்ப அப்டேட்ல இருக்காங்க. பேஸ்புக் அக்கவுண்ட் வச்சிருக்காங்க. அவங்களோட இயக்குனர் ஒரு பக்கம் கத்திக்கிட்டு இருப்பாரு. ஆனால் இவங்களை ஒரு இடத்தில் உட்கார வைக்க முடியாது. டயலாக் பேச ஆரம்பிச்சா முடிக்கவே மாட்டாங்க. ஒரே சிரிப்பா இருக்கும்

பிணமாக நடிப்பது ரொம்ப கஷ்டமாக இருந்தது தானே?
பிணத்தை சுற்றி தான் முக்கிய கதையே நடக்கும் அங்கே நடக்கும் அத்தனை பிரச்னைகளுக்கும் பிணம் தான் சாட்சியாக இருக்கும். இயக்குனர் காட்சி எடுத்த பிறகு கட் சொல்லவே மாட்டார். அப்படியே இருப்பது சிரமமாக இருந்தது

சமீப காலமா அம்மா கேரக்டரில் நடிக்கிறீங்களே?
நான் நடித்த விட்னஸ், பிகினிங் படம் எல்லாம் அம்மாக்கள் சுற்றிய கதை தான். இந்த கேரக்டரில் நடிக்கிறது எனக்கு சந்தோஷமாக தான் இருக்கு. அம்மா கேரக்டர் என்றாலும் படத்தில் நிஜமாக அம்மாவாக மாறி விடுவேன்.

படம் இயக்கம், தயாரிப்பு முயற்சிகள் எப்படி?
'அப்பாவின் மீசை' என்ற ஒரு படம் இயக்கினேன். இன்னும் ரிலீஸ் ஆகலை. அடுத்து ஒரு கதை ரெடி பண்ணிட்டு இருக்கேன். இதற்கிடையில் தெலுங்கு, மலையாள படங்களில் நடிக்கிறேன். ஒரு பிலிம் மேக்கரா நல்ல கதையை கண்டிப்பா மக்களிடம் கொண்டு வருவேன்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாதவர் ரகுவரன்…?
ஒரு படம் குறித்து ஒரு கேரக்டர் சொல்லிட்டால் அந்த நிமிஷமே அந்த கேரக்டருக்குள்ள தன்னை பொருத்தி கொள்வார். ரெண்டு பேரும் ஒரு மலையாள படத்தில் (கக்கா) நடிக்கும் போது எனக்கு 15 வயசு. அவருக்கு 24 வயசு. நல்ல நடிகர், அருமையான மனிதர்.

மகன் ரிஷி என்னவா வரணும்னு ரகுவரன் ஆசைபட்டார்?
'நீ நடிகனா வரணும்னு நினைத்தால் அமிதாப்பச்சன் மாதிரி வரணும்'என்பார் அவரை பொருத்தவரை ரிஷி என்ன பண்ணாலும் அது பெஸ்ட்டா பண்ணனும்னு ஆசைப்பட்டார். ஒரு சமயம் நீ பெரிய அறிவியல் விஞ்ஞானியாக வரணும் என்பார். இப்போ என் மகன் அறிவியல் ஆராய்ச்சி படிப்பு படிக்க போறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.