உடுப்பி : ‘டிவி’ சேனலை மாற்றிய தகராறில் குட்டையில் குதித்து மனைவி தற்கொலை செய்து கொண்டார். காப்பாற்ற முயன்ற கணவரும் தண்ணீரில் மூழ்கி இறந்தார். இவர்களது இரண்டு பிள்ளைகள் அனாதையாக தவிக்கின்றன.
கர்நாடகாவில் உள்ள உத்தர கன்னடா மாவட்டம் யல்லாப்பூரைச் சேர்ந்தவர் இம்மானுவேல் சித்தி 40. இவரது மனைவி யசோதா 32. இந்த தம்பதிக்கு 9 வயதில் மகனும் 7 வயதில் மகளும் உள்ளனர்.
உடுப்பியின் கார்கலா தாலுகா நல்லுார் கிராமத்தில் மனைவி பிள்ளைகளுடன் இம்மானுவேல் வசித்தார். அங்குள்ள ரப்பர் தோட்டத்தில் தொழிலாளியாக வேலை செய்தார். நேற்று காலை குடும்பத்தில் அனைவரும் ‘டிவி’ பார்த்தனர். அப்போது இம்மானுவேல் அடிக்கடி சேனலை மாற்றியதால் கணவன் மனைவி இடையில் தகராறு ஏற்பட்டது. மனைவியை கணவர் அடித்தார்.
மனம் உடைந்த யசோதா கணவருடன் கோபித்து கொண்டு வீட்டில் இருந்து வேகமாக வெளியேறினார். மனைவியை பின்தொடர்ந்து கணவரும் சென்றார். அப்பகுதியில் உள்ள பண்ணை குட்டையில் யசோதா குதித்தார்.அவரை காப்பாற்ற இம்மானுவேலும் குதித்தார்.இருவருக்கும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று இருவரது உடல்களையும் மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பெற்றோரை இழந்து இரு பிள்ளைகளும் அனாதையாக நிற்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement