வரும் வாரத்தில் இந்திய பங்கு சந்தையில் பல்வேறு நிறுவனங்கள் தங்களது பொதுப் பங்கு வெளியீட்டினை (IPO) செய்யவுள்ளன. குறிப்பாக சில சிறு குறு நிறுவனங்கள் தங்களது பங்கினை வெளியிடவுள்ளன.
சர்வதேச நாடுகள் பலவும் நெருக்கடி நிலையை சந்தித்து வந்த போதிலும் இந்திய பொருளாதாரம் வலுவான பாதையை நோக்கி சென்று கொண்டுள்ளது என நிபுணர்கள் கணித்து வருகின்றனர். இதற்கிடையில் இந்திய பங்குச் சந்தையானது தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இது அன்னிய முதலீட்டாளர்களுக்கும், இந்திய முதலீட்டாளர்களுக்கும் நல்ல முதலீட்டு மையமாகவும் பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில் இந்திய பங்குச் சந்தையில் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் தங்களது காலடியை பதித்து வருகின்றன.

அந்த வகையில் வரும் வாரத்தில் பல நிறுவனங்கள் தங்கள் பங்குகளை வெளியிடவுள்ளன. பொதுவாக பொதுப் பங்கு வெளியீட்டில் பங்கு விலை குறைவாக இருக்கும் என்பதால், முன்னணி நிறுவனங்களின் பங்குகளை கூட குறைந்த விலையில் வாங்க முடியும். இதனால் இது சிறிய முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.
குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இந்த பங்கு வெளியீட்டினை செய்யவுள்ளது நல்ல வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. இந்த பங்குகள் வெளியீடானது ஜூன் 26-ல் இருந்து தொடங்கவுள்ளது.
மொத்தத்தில் வரும் வாரத்தில் 7 நிறுவனங்கள் தங்கள் பங்கு வெளியீட்டினை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சுமார் 1,600 கோடி ரூபாய் நிதியானது திரட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மட்டும் 110 கோடி ரூபாய் திரட்டவுள்ளன.
ஐடியாஃபோர்ஜ் டெக்னாலஜி
இதில் ட்ரோன் உற்பத்தியாளரான ஐடியாஃபோர்ஜ் டெக்னாலஜி (ideaForge Technology) முதலாவதாக வரும் வாரத்தில் பங்கு வெளியீட்டை செய்யவுள்ளது. இதன் பங்கு வெளியீடானது ஜூன் 26 அன்று வெளியாகலாம். இதன் மூலம் 567 கோடி ரூபாய் நிதியை இந்த நிறுவனம் திரட்டவுள்ளது. இதன் பங்கு வெளியீட்டு விலையானது பங்குக்கு 638 – 672 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மொத்த பங்கு வெளியீட்டில் 240 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பங்குகள் வெளியிடப்படவுள்ளன. இதே புரமோட்டர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் வசம் இருக்கும் 48.69 லட்சம் பங்குகள் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த பங்கு வெளியீட்டில் ஊழியர்களுக்கு என தனியாக 13,112 ஈக்விட்டி பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு பங்குக்கு 32 ரூபாய் தள்ளுபடியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பங்கு வெளியீட்டுக்கு முன்னதாக விமான துறையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று, 255 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதும் கவனிக்கதக்கது.

ட்ரோன் நிறுவனத்தின் இந்த நிதி திரட்டல் மூலம் கடனை திரும்ப செலுத்துதல், மூலதன செலவினம், புதிய முதலீடு, பொது செலவினங்கள் என பலவற்றுக்கும் பயன்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த பொதுப் பங்கு வெளியீட்டில் முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 22 பங்குகளை வாங்கிக் கொள்ள முடியும். அதிகபட்சமாக 22-ன் மடங்கில் வாங்கிக் கொள்ளலாம். ஜூன் 26 அன்று தொடங்கும் இதன் வெளியீடானது ஜூன் 29 அன்று முடிவடையவுள்ளது. அதன் பிறகு ஜூலை 7 அன்று இதன் பங்குகள் பங்கு சந்தையில் பட்டியலிடப்படலாம் எனவும் தெரிகிறது.
சையண்ட் டிஎல்எம் ( Cyient DLM)
இரண்டாவதாக பங்கு வெளியிடவுள்ள நிறுவனம் சையண்ட் டிஎல்எம் (Cyient DLM). ஐடி சேவையினை வழங்கி வரும் சையண்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமான இது ஜூன் 27 அன்று தனது பங்கினை வெளியிடவுள்ளது. ஜூன் 30 அன்று முடிவடையவுள்ளது. இதில் முக்கிய ஆங்கர் முதலீட்டாளர்களுக்கான வெளியீடானது ஜூன் 26 -ல் தொடங்கியது.

எனினும் இந்த வெளியீட்டில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவெனில் 2.23 கோடி ரூபாய் மட்டுமே புதிய பங்குகள் வெளியிடப்படவுள்ளன. அதற்கான விலை 250 – 265 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பங்கு வெளியீட்டின் மூலம் மொத்தம் 592 கோடி ரூபாய் நிதியானது திரட்டப்படலாம்.
ஐடி நிறுவனத்தின் இந்த வெளியீட்டில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் ஊழியர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊழியர்களுக்காக பங்கின் இறுதி விலையில் இருந்து, ஒவ்வொரு பங்குக்கும் 15 ரூபாய் தள்ளுபடியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படவுள்ள நிதியானது கடனை திரும்ப அடைக்கவும், செயல்பாட்டு மூலதன செலவினங்களுக்காகவும், நிறுவனத்தின் வளர்ச்சிக்காகவும் பயன்படுத்தபடவுள்ளது. இது தவிர புதிய நிறுவனங்கள் கையகப்படுத்தலுக்கு பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த பங்கு வெளியீட்டில் முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 56 பங்குகளை வாங்க வேண்டும். அதிகபட்சமாக 56-ன் மடங்கில் வாங்கிக் கொள்ளலாம். முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த நிறுவனம் ஜூலை 10 அன்று பங்கு சந்தையில் பட்டியலிட படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்றாவதாக வரும் வாரத்தில் உள்கட்டமைப்பு துறையை சேர்ந்த பிகேஹெச் வென்ச்சர்ஸ் நிறுவனம் தனது பங்கினை வெளியிடவுள்ளது. இது ஜூன் 30 அன்று தனது பங்கினை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஜூலை 4 அன்று முடிவடையவுள்ளது. இந்த பங்கு வெளியீட்டின் மூலம் சுமார் 380 கோடி ரூபாய் மதிப்பிலான நிதியானது திரட்டப்படவுள்ளது.
இந்த பங்கு வெளியீட்டின் மூலம் சுமார் 2.56 கோடி பங்குகள் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 1.82 கோடி பங்குகள் புதிய வெளியீடாகும், புரமோட்டர்கள் வசம் இருக்கும் 73.73 லட்சம் பங்குகளும் விற்பனை செய்யப்படவுள்ளது.
இந்த நிதியின் மூலம் புதிய திட்டங்கள் மூலம் விரிவாக்கம், மூலதன செலவினங்களுக்கும் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த பங்கானது ஜூலை 12 அன்று பட்டியலிடப்படவுள்ளது.
சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs)
எஸ்.எம்.இ துறையில் வரும் வாரத்தில் முதலாவதாக கன்வேயர் பெல்ட் உற்பத்தியாளரான பென்டகன் ரப்பர் (Pentagon Rubber) தனது பங்கு வெளியீட்டினை செய்யவுள்ளது. இதன் மூலம் 16.17 கோடி ரூபாய் மதிப்பிலான நிதியினை திரட்டவுள்ளது. இந்த பங்கு வெளியீடானது ஜூன் 26 அன்று வெளியிடவுள்ளது. இது ஜூன் 30 அன்று முடிவடையவுள்ளது. இந்த பங்கு வெளியீட்டின் மூலம் 23.1 லட்சம் ஈக்விட்டி பங்குகள் வெளியிடப்படவுள்ளன. இதில் முழுக்க முழுக்க புதிய வெளியீடாக செய்யப்படவுள்ளன.

இந்த பங்கு வெளியீட்டில் பங்கு விலையானது ஒரு பங்குக்கு 65 – 70 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியானது, மூலதன செலவினங்களுக்காக வும், நிறுவனத்தின் பொது செலவினங்களுக்காகவும் பயன்படுத்தப்படவுள்ளது.
எஸ்.எம்.இ துறையில் இரண்டாவது நிறுவனமான குளோபல் பெட் இண்டஸ்ட்ரீஸ் (Global Pet Industries) ஜூன் 29 அன்று தனது பங்கு வெளியீட்டை செய்யவுள்ளது. இங்கு பங்கு விலை ஒரு பங்குக்கு 49 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் வெளியீடானது ஜூலை 3 அன்று முடிவடையவுள்ளது. இந்த வெளியீட்டின் மூலம் 13.23 கோடி ரூபாய் மதிப்பிலான நிதியானது திரட்டப்படவுள்ளது. இந்த நிதியானது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படவுள்ளது.
இது தவிர வரும் வாரத்தில் வெளியாகவிருக்கும் இரண்டு நிறுவனங்கள் திரித்யா டெக் மற்றும் சினாப்டிக்ஸ் டெக்னாலஜிஸ். ஜூன் 30 அன்று இதன் பங்கானது வெளியிடப்படவுள்ளது. இது ஜூலை 5 அன்று முடிவடையவுள்ளது.
ஐடி துறையை சார்ந்த திரித்யா டெக் 62.88 லட்சம் பங்குகள் மூலம், 26.41 கோடி ரூபாய் மதிப்பிலான நிதியினை திரட்டவுள்ளன. இதன் பங்கு விலையானது ஒரு பங்குக்கு 35 – 42 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்திலும் முழுக்க முழுக்க புதிய வெளியீடுகளே. திரட்டப்படும் இந்த நிதியானது கடனை திருப்பி அடைக்கவும், பொது செலவினங்களுக்காகவும் பயன்படுத்தப்படவுள்ளது.
சினாப்டிக்ஸ் டெக்னாலஜிஸ்
ஐடி துறையை சார்ந்த இந்த நிறுவனம் 54.03 கோடி ரூபாய் நிதியை திரட்ட உள்ளது. இதற்காக 22.8 லட்சம் பங்குகளையும் வெளியிடவுள்ளது. இந்த வெளியீட்டில் ஒரு பங்குக்கு 237 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 35.08 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய வெளியீடும், புரமோட்டர்கள் வசம் இருக்கும் 18.96 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கும் வெளியிடப்படவுள்ளன.
பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்பட உள்ள இந்த நிதியானது கடனை திரும்ப அடைக்கவும், மூலதன செலவினங்களுக்காகவும், புதிய முதலீடுகளுக்காகவும் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளது. சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனமான இது, என்.எஸ்.இ மற்றும் பி.எஸ்.இ-யிலும் பட்டியலிடப்படும் என அறிவித்துள்ளது.

எப்போது பட்டியலிடப்படும்?
எஸ்.எம்.இ துறையில் உள்ள பெண்டகன் ரப்பர் ஜூலை 10 அன்று என்.எஸ்.இ-ல் பட்டியலிடப்படவுள்ளது. இதே குளோபல் பெட் இண்டஸ்ட்ரீஸ் ஜூலை 11 அன்றும், திரித்யா டெக் மற்றும் சினாப்டிக்ஸ் டெக்னாலஜி ஜூலை 13 அன்றும் பட்டியலிடப்படவுள்ளன.
நடப்பு ஆண்டில் மேற்கண்ட பங்கு வெளியீடு தவிர, 8 நிறுவனங்கள் 10,000 கோடி ரூபாய்க்கு அதிகமான நிதியினை திரட்டியுள்ளன. எஸ்.எம்.இ பிரிவில் 65 நிறுவனங்கள் 1,600 கோடி ரூபாய்க்கு மேல் நிதியினை திரட்டியுள்ளன.
மொத்தத்தில் ஐபிஓ சந்தையில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு இது நல்ல வாய்ப்பு…