சென்னை: மாமன்னன் திரைப்படம் சாதி பெருமை பேசும் படம் என விமர்சனம் எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் ஆகியோர் நடித்துள்ளனர்.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்டத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு தணிக்கைக்குழு யூஏ சான்றிதழ் அளித்துள்ளது.
மாரிசெல்வராஜ்: பா.இரஞ்சித் தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ் முதல் படத்திலேயே வெற்றிவாகை சூடினார். பரியேறும் பெருமாள் படத்தின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து தனுஷுடன் இணைந்து கர்ணன் படத்தை இயக்கினார். இப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றதோடு பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலை அள்ளியது.
ஹிட் மூவி: இரண்டு பிளாக் பஸ்டர் வெற்றிப்படங்களை கொடுத்த மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தை இயக்கி உள்ளார். இத்திரைப்படம் உதயநிதி ஸ்டாலினின் கடைசி திரைப்படம் என்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படமாக மாமன்னன் இருக்கும் என்றும், இன்றைய சூழலில் இருக்கும் அரசியலை பேசக்கூடிய படமாக இருக்கும் என்றார்.
சவாலாக இருந்தது: மாமன்னன் திரைப்படம் ஜூன் 29ந் தேதி வெளியாக உள்ளதால், படத்தின் ப்ரோமோஷன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் பேசிய உதயநிதி ஸ்டாலின், மாமன்னன் படத்தில் நடிப்பது சவாலாகத்தான் இருந்தது, இந்த படத்தின் கதையை கேட்கும் போது இதில் நான் எப்படி நடிக்க முடியும் என்று யோசித்தேன், பின் அடுத்த நொடியே ஏன் இந்த படத்தில் நாம் நடிக்கக்கூடாது என்று தோன்றியதால் இந்த படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டேன்.
கூலாக இருப்பார்: மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு முதலில் சேலத்தில் தான் தொடங்கியது, படத்திற்கு சீன் பேப்பர் இருக்காது, டையலாக் பேப்பர் இருக்காது, அடுத்த நாள் என்ன சீன்,என்ன வசனம் எதுவுமே நமக்கு தெரியாது,சார் நாளைக்கு என்ன சீன் என்று கேட்டால், காலையில் வாங்க பாத்துக்கலாம் என்று கூலாக பதில் சொல்லுவார். தினமும் காலையில் வந்து இதைப்பண்ணுங்க, இப்படி நடங்க என்று சொல்வார்.
உதயநிதி விளக்கம்: மேலும், இப்படம் சாதி பெருமையை பேசும் படம் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. மாமன்னன் சாதி பெருமை பேசும் படமாக இல்லை. சாதி மறுப்பைதான் பேசி இருக்கிறது. படத்தில் யாரையும் எதிர்மறையாகவும் காட்டவில்லை. எந்த சாதியினரையும் அவமதிக்கும் காட்சிகளும் படத்தில் இல்லை. யாரையும் தாக்கவும் இல்லை. ஒவ்வொரு பக்கத்திலும் நியாயமும் இருக்கும். எதிர் விஷயங்களும் இருக்கும் என்று உதயநிதி ஸ்டாலின் விளக்கம் கொடுத்துள்ளார்.