
மாமன்னன் சாதி படமா? உதயநிதி விளக்கம்
உதயநிதி ஸ்டாலின் நடித்து கடைசியாக வெளிவந்த கண்ணை நம்பாதே படம் தோல்வியை தழுவியது. தற்போது அமைச்சர் ஆன பிறகு தனது கடைசி படமாக மாமன்னன் படத்தை அறிவித்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கும் இந்த படத்தில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த டிரைலர் நல்ல வரவேற்பைப் பெற்றாலும் நெட்டிசன்கள் சிலர் இந்த படம் சாதி குறித்து பேசுவதாக விமர்சித்துள்ளனர்.
இந்த நிலையில் உதயநிதி அளித்த ஒரு பேட்டியில் இதற்கு விளக்கம் அளித்துள்ளார் அதன்படி, “மாமன்னன் சாதி பெருமை பேசும் படம் இல்லை சாதி மறுப்புதான் பேசி இருக்கிறது. எந்த சாதியினரையும் அவமதிக்கும் காட்சிகளும் படத்தில் இல்லை. குறிப்பாக யாரையும் தாக்கவும் இல்லை. ஒவ்வொரு பக்கத்திலும் நியாயம் இருக்கும். அதேபோல் எதிர் விஷயங்களும் இருக்கும். அதற்கு படத்தில் விளக்கம் இருக்கிறது. மாமன்னன் படத்தில் வடிவேலு தான் ஹீரோ. அவர் பெயர்தான் முதலில் வரும். இது அரசியல் பின்புலம் கொண்ட கதையென்பதால் நான் நடிக்கும் கடைசி படமாக இப்படம் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். இனிமேல் படங்களில் நடிக்க மாட்டேன் அதனால் தான் கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஏற்கனவே ஒப்பந்தம் ஆன நிலையில் அந்த படத்தில் இருந்து விலகினேன் '' என்று தெரிவித்துள்ளார்.