சூப்பர் 6 சுற்றுக்கு  தகுதி பெற்றது இலங்கை அணி

அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 133 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இலங்கை அணி 2023 உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

புலவாயோவில் நேற்று (25) நடைபெற்ற பி குழுவுக்கான இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இலங்கை அணி 49.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 325 ஓட்டங்களை பெற்றது.

இதன்போது ஒருநாள் சர்வதேச போட்டிகளில் தனது கன்னி சதத்தை (103) பெற்ற திமுத் கருணாரத்ன, சதீர சமரவிக்ரமவுடன் சேர்ந்து 3ஆவது விக்கெட்டுக்காக 168 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டார். சமரவிக்ரமவும் ஒருநாள் போட்டிகளில் தனது அதிகபட்ச ஓட்டங்களாக 86 பந்துகளில் 82 ஓட்டங்களை பெற்றார்.

கடைசி நேரத்தில் வேகமாக துடுப்பெடுத்தாடிய தனஞ்சய டி சில்வா 35 பந்துகளில் ஆட்டமிழக்காது 42 ஓட்டங்களை பெற்றார்.

இதனைதொடர்ந்து பதிலெடுத்தாடிய அயர்லாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க 31 ஓவர்களில் 192 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

இலங்கை சார்பில் மீண்டும் ஒருமுறை சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வனிந்து ஹசரங்க 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹசரங்க இந்தத் தொடரில் இதுவரை ஆடிய மூன்று போட்டிகளிலும் மொத்தம் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் இந்த வெற்றியுடன் பி குழுவில் ஸ்கொட்லாந்து, ஓமான் அணிகளுடன் சுப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டது.

இலங்கை அணி தனது கடைசி குழுநிலை போட்டியில் நாளை (27) ஸ்கொட்லாந்தை எதிர்கொள்ளவிருப்பதோடு சுப்பர் சிக்ஸ் சுற்றுக்கான புள்ளிகளை அதிகரிக்க அந்தப் போட்டியில் வெற்றியீட்டுவது கட்டாயமாகும்.

இதேவேளை சூப்பர் 6 சுற்றுப் போட்டிகள் ஜூன் 29ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.