ஜெய்ப்பூர் : பணி நேரம் முடிந்தது என கூறி ஏர் இந்தியா விமானத்தின் பைலட்டுகள் சென்றதை அடுத்து புதுடில்லி வர வேண்டிய விமானம் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால்
பயணியர் கடும் அவதிக்கு ஆளாகினர்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனில் இருந்து ஏர் இந்தியா விமானம் நேற்று புதுடில்லிக்கு புறப்பட்டது. மோசமான வானிலை காரணமாக புதுடில்லிக்கு வர இருந்த விமானம் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் அதிகாலை தரையிறங்கியதுபின் அந்த விமானம் மூன்று மணி நேரமாகியும் ஜெய்ப்பூரில் இருந்து புறப்படவில்லை. அதில் இருந்த பயணியர் அனவைரும் இறக்கிவிடப்பட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த 350க்கும் மேற்பட்டோர், இது குறித்து விசாரித்த போது பணி நேரம் முடிந்ததாக கூறி விமானிகள் சென்றுவிட்டதாகக் கூறப்பட்டது. இதையடுத்து, தங்கள் நிலை குறித்து சமூக வலைதளமான ‘டுவிட்டரில்’ பதிவிட்டனர்.
மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, ஏர் இந்திய நிறுவனத்தினரை ‘டேக்’ செய்து கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, நான்கு மணி நேரத்துக்குப் பின், மாற்று ஏற்படாக பயணியர் அனைவரும் சொகுசு பஸ்சில் புதுடில்லி அழைத்து செல்லப்பட்டனர்.இது குறித்து கருத்து தெரிவித்த பயணி ஒருவர், ‘ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் இருந்த ஏர் இந்தியா ஊழியர்கள் எங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை.
‘பல மணி நேர தவிப்புக்குப் பின், விமான பயணியரை பஸ்சில் புதுடில்லிக்கு ஏற்றிச் சென்ற தீர்வு முற்றிலும் கேலிக்குரியது’ என்றார். இந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ள ஏர் இந்தியா நிறுவனம், ‘அனைத்து நடவடிக்கைகளும் எங்கள் பயணியரின் பாதுகாப்புக்காகவே எடுக்கப்பட்டது’ என
கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement