நான் பாடியது ஏ.ஆர்.ரஹ்மானுக்கே தெரியாது : வடிவேலு சொன்ன புதிய தகவல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி கதாநாயகனாக நடித்துள்ள படம் மாமன்னன். வரும் ஜூன் 29ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகவும் பஹத் பாசில் வில்லனாகவும் நடித்துள்ளனர். மிக முக்கிய வேடத்தில் நடிகர் வடிவேலு நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் நகைச்சுவை நடிப்பை ஒதுக்கி வைத்து விட்டு குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதுடன், இந்த படத்தில் ஒரு பாடலையும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியுள்ளார். அவர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடும் முழு பாடல் இது. இதற்கு முன்னதாக காதலன் படத்தில் அவரது இசையில் பேட்ட ராப் என்கிற பாடலில் சில வார்த்தைகளை மட்டுமே பாடி இருந்தார் வடிவேலு என்பது ரசிகர்களுக்கு தெரியும்.

இந்த நிலையில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் அஜித் நடிப்பில் வெளியான பவித்ரா திரைப்படத்தில் தானும் கோவை சரளாவும் இணைந்து ஒரு பாடலை பாடியதாக ஒரு புதிய தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் வடிவேலு. இந்தப் பாடல் பதிவின்போது ஏ.ஆர்.ரஹ்மான் ஒலிப்பதிவு கூடத்தில் இல்லை என்றும் அவரது உதவியாளர்கள் தான் இதை பதிவு செய்தனர் என்றும் இப்படி ஒரு பாடல் தான் பாடியது கூட ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நினைவில் இருக்காது என்றும் கூறியுள்ளார் வடிவேலு. அவர் கூறிய அந்த பாடல் பவித்ரா படத்திலும் இடம் பெறவில்லை.

அதேசமயம் இந்த படத்தில் வடிவேலு – கோவை சரளா இடையே ஈச்சம்பழம் என்ற பாடல் உள்ளது. இந்த பாடலை சாகுல் ஹமீது, சித்ரா பாடி உள்ளனர். ஒருவேளை இந்த பாடலை தான் அவர் குறிப்பிட்டு இருப்பார் போல.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.