புதுடெல்லி: பிரதமர் மோடி 4 நாள் அரசு முறை பயணமாக கடந்த 20-ம் தேதி அமெரிக்கா சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பின் போது இரு நாடுகளிடையிலான வர்த் தகம், பாதுகாப்பு உள்பட பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பின்னர் அமெரிக்க நாடாளுமன்றத்திலும் பிரதமர் மோடி உரையாற்றினார். இந்த சந்திப்பின் போது இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு அமெரிக்க தொழிலதிபர்களிடையே பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அதை ஏற்று கூகுள், அமேசான், மைக்ரான் உட்பட பல நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வந்துள்ளன. இதனை தொடர்ந்து பிரதமர் மோடிக்கு அமெரிக்க அரசு விருந்தும் வழங்கியது.
இந்நிலையில் ஜோ பைடன் தனது ட்விட்டர் பதிவில், ‘‘உலகிலேயே இந்தியா – அமெரிக்கா நட்பு மிகவும் உறுதியானது, வலுவானது. முன்பு எப்போதையும் விட இப்போது புதிதான மாற்றத்தை இரு நாடுகளிடையிலான நட்புறவு கொண்டுள்ளது’’ என்றார்.
இதற்குப் பதிலளித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று கூறியதாவது:
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்துடன் நான் முழுமையாக உடன்படுகிறேன். இருநாடுகளின் நட்புறவு நிலையானது, உலகின் நன்மைக்கானது. இரு நாடுகளிடையே நிலவும் இந்த நட்புறவால் பூமி உருண்டையை இன்னும் வாழத்தக்கதாக மாற்ற முடியும்.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நட்புறவு உலக நன்மைக்கான சக்தியாக விளங்கும். அண்மையில் நான் மேற்கொண்ட அமெரிக்கப் பயணத் தால் நமது நாடுகளிடையிலான நட்புறவு இன்னும் அதிகமாக வலுப்படும்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.