சென்னை: கடந்த மாதம் வெளியான அசோக் செல்வனின் போர் தொழில் திரைப்படம் அஜித்தின் துணிவு படத்தை பாக்ஸ் ஆபிஸில் முந்தியதாக ஹாட் தகவல்கள் வெளியாகி திரையுலகத்தையே வியப்பில் ஆழ்த்தி உள்ளன.
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து அஜித் குமாரின் 3வது படத்தை இயக்குநர் அ. வினோத் இயக்கி இருந்தார்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான துணிவு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் விஜய்யின் வாரிசு படத்திடம் பலத்த அடி வாங்கி இருந்தது.
அஜித்தின் துணிவு: மைக்கேல் ஜாக்சன் என்கிற பெயரில் நடிகர் அஜித் வங்கி கொள்ளையில் ஈடுபடும் காட்சிகள் எல்லாம் இடம்பெற்று நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை படங்களை விட அஜித் ரசிகர்களை ரொம்பவே திருப்தி செய்யும் ஆக்ஷன் படமாகவும் வங்கியில் நடக்கும் மோசடிகளை தோலுரித்துக் காட்டக் கூடிய சமூக கருத்துக் கொண்ட படமாகவும் துணிவு வெளியானது.
ஆனால், கிளைமேக்ஸ் காட்சிகளில் நம்ப முடியாத ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்ற நிலையில், இரண்டாம் பாதியில் படம் பெரிதாக சொதப்பியதால் பிளாக்பஸ்டர் வெற்றியை அந்த படம் நெருங்க முடியாமல் போனது.

வசூலில் முந்திய வாரிசு: தில் ராஜு தயாரிப்பில் தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார் நடித்த வாரிசு திரைப்படம் 300 கோடி ரூபாய் வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
ஆனால், துணிவு திரைப்படம் கடைசி வரை எவ்வளவு வசூல் செய்தது என்கிற அறிவிப்பையே வெளியிடாத நிலையில், வாரிசு படம் துணிவு படத்தை முந்தியதாக தகவல்கள் வெளியாகின.

போர் தொழில் அதிரடி: இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் நடித்த போர் தொழில் திரைப்படம் கடந்த மாதம் வெளியான நிலையில், படம் ராட்சசன் படத்தையே மிஞ்சிய த்ரில்லர் என ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கல் பலரும் பாராட்டினர்.
வரும் ஜூலை 7ம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ள போர் தொழில் 4 வாரங்களாக தியேட்டர்களில் வெற்றிநடை போட்டு அதிரடி காட்டி வருகிறது.

துணிவை துவம்சம் செய்த போர் தொழில்: இந்நிலையில், அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் நடித்த போர் தொழில் திரைப்படம் அஜித்தின் துணிவு படத்தின் வசூலையே முந்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கேரளாவில் துணிவு திரைப்படம் 5 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், போர் தொழில் திரைப்படம் 5.1 கோடி ரூபாய் வசூல் செய்து துணிவு வசூலை முந்தியுள்ளதாக தற்போது ஹாட் தகவல்கள் வெளியாகி உள்ளன. அசோக் செல்வன் படமே வசூலில் அஜித் படத்தை முந்தி விட்டதே என விஜய் ரசிகர்கள் பயங்கர ட்ரோல் செய்து வருகின்றனர்.