திருவண்ணாமலை: நடிகர் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. இதற்கான பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய மூத்த மகள் இயக்கத்தில் லால் சலாம் என்ற படத்தில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது நடித்து வருகிறார்.
இந்தப் படத்தை தொடர்ந்து ஞானவேல் இயக்கத்தில் புதிய படத்தில் நடிகர் ரஜினிகாந்த் இணையவுள்ளார். இந்த இரண்டு படங்களையும் லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
காரில் நின்றபடி ரசிகர்களுக்கு கையாட்டிய ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியானது அண்ணாத்த படம். இயக்குநர் சிவா இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், குஷ்பூ, மீனா, பிரகாஷ்ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்திருந்தது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆனாலும் வசூலில் பின்னி பெடலெடுத்தது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
இந்நிலையில் மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலேயே ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த். இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். படம் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சிவராஜ்குமார், சுனில், மோகன்லால், ஜாக்கி ஷெராப் என இந்திய அளவில் ஒவ்வொரு மொழியிலும் சிறந்த நடிகர்களை இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தில் முதல் முறையாக ரஜினியுடன் தமன்னா இணைந்துள்ளார்.

இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது தன்னுடைய மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் லால் சலாம் என்ற படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்தப் படத்தில் அவர் கேமியோ ரோலில்தான் நடித்துவருகிறார். மொய்தீன் பாய் என்ற முஸ்லிம் வேடத்தில் ரஜினி நடித்துள்ளார். இந்த படத்தில் அவரின் காட்சிகள் முன்னதாக மும்பை, புதுச்சேரியில் நடைபெற்ற நிலையில் தற்போது திருவண்ணாமலையில் நடைபெற்று வருகிறது.
முன்னதாக புதுச்சேரியில் நடைபெற்ற சூட்டிங்கின்போது ரஜினி இடம்பெற்ற வீடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மொய்தீன் பாய் கேரக்டர் கெட்டப்பில் அவர் இந்த வீடியோவில் காணப்பட்டார். இந்நிலையில் தற்போது திருவண்ணாமலையில் சூட்டிங்கை முடித்துவிட்டு வெளியில் வந்த ரஜினியின் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. அவரை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் காத்திருந்தனர்.
➡️ Happy For #Thalaivar for daily Waving Hands to People who goes to C him.
➡️ Wish same type of interest he should show for Promotions of his Films.
➡️ Please Join Telugu States. Scenario will be Different Sir.#Jailer, #Rajinikanth, #Thalaivar pic.twitter.com/0Rj4UilEo4— Rajini Fans Kadapa (@Rajini_Kadapa) June 28, 2023
அவர்களை எல்லாம் காரின் மேற்கூரை வழியாக கையாட்டி உற்சாகப்படுத்தினார் ரஜினிகாந்த். இந்த வீடியோவில் லவ் யூ தலைவா என்று ரசிகர்கள் கத்தி தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தியதையும் பார்க்க முடிந்தது. வேலூர் சாலையில் பண்ணை வீடு ஒன்றில் கடந்த சில தினங்களாக லால் சலாம் படத்தின் சூட்டிங் நடைபெற்றுவருகிறது. இதில் ரஜினிகாந்த் பங்கேற்ற காட்சிகள் படமாக்கப்பட்டன. இன்றும் இங்கு தொடர்ந்து சூட்டிங் நடந்தது.