விண்வெளி தொடர்பான பாடத்திட்டங்கள் கடலளவு விரிந்திருக்கிறது. பட்டப்படிப்புகளைவிட அந்தந்தத் துறை சார்ந்த ஒருங்கிணைந்த படிப்புகளைக் கற்பதற்கு மாணவர்கள் அதிக அளவில் முன்வருகிறார்கள்.
அதுபோலத்தான் விண்வெளி தொடர்பாகப் பலரும், தனி மையங்களிலும், கெளரவ விரிவுரையாளர்களிடமும் கற்க முன் வருகின்றனர். விண்வெளி குறித்துக் கற்றுக்கொள்ள ஆர்வத்துடன் இருக்கும் அனைத்துத் தரப்பினருக்கும் நேரில் சென்று வகுப்புகளை எடுத்துவருகிறார், மும்பை நேரு கோளரங்கத்தின் கெளரவ விரிவுரையாளர் நடராஜன்.

இந்தியா முழுவதும் சென்று அனைத்துத் தரப்பினருக்கும் இலவசமாக வகுப்புகளை எடுத்துவருகிறார். விண்வெளி தொடர்பான தனது ஆய்வுகள், மக்கள் விண்வெளி குறித்து நம்பிக் கொண்டிருக்கும் கட்டுக்கதைகள் குறித்த உண்மைத் தரவுகள் என விண்வெளி தொடர்பான பல சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். விண்வெளி தொடர்பாக இந்தியா முழுவதும் சென்று இலவசமாக வகுப்புகள் மேற்கொள்வதை இன்பமாகக் கருதுபவரிடம் நிகழ்ந்த இந்த உரையாடல், பேரனுபவமாக அமைந்தது.
“எனக்கு 7 வயதிலேயே வானியல் பற்றிப் படிக்க வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது. என்னுடைய குழந்தைப் பருவம் புபனேஷ்வர் நகரத்தில் கழிந்தது. எங்களது வீட்டின் மாடி அகலமாகப் பரந்து விரிந்திருக்கும். அங்கிருந்து ஒரு நாள் என் தந்தை துருவ நட்சத்திரத்தையும், வெள்ளிக் கோளையும் காட்டினார். அதைப் பார்த்ததிலிருந்து எனக்கு வான்வெளிமீதான பார்வை புனிதமாக அமைந்தது. அதன் பின்பு வான்வெளி தொடர்பாகப் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டு 1984 ஆம் ஆண்டு மும்பை நேரு கோளரங்கத்தில் கெளரவ விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தேன். எனது பட்டப்படிப்பு குறித்து நான் விவரித்தால் நீங்கள் ஆச்சரியமடைவீர்கள்.

என் இளங்கலைப் பட்டப்படிப்பினை இங்கிலிஷ் லிட்ரேச்சரில் முடித்தேன். வான்வெளி குறித்து நான் தனியாகப் புத்தகங்கள் போன்றவற்றைப் படித்துதான் கற்றுக்கொண்டு நேரு கோளரங்கத்தில் பணிக்குச் சேர்ந்தேன்” எனப் புன்முறுவலோடு பெருமூச்சு விட்டவர், “பல விஞ்ஞானிகளிடம் சென்று வான்வெளி தொடர்பாகப் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். 1984 ஆம் ஆண்டு நேரு கோளரங்கத்தின் இயக்குநராக இருந்தவர் என்னுடைய விருப்பத்தை அறிந்து என்னைப் பணியில் அமர்த்தினார். அதிலிருந்து 39 ஆண்டுகளாக மும்பை நேரு கோளரங்கத்தில் கெளரவ விரிவுரையாளராக மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்துவருகிறேன்” என்றவர், இருக்கையில் சாய்ந்து தன் வகுப்புகள் குறித்த நினைவுகளில் ஆழ்ந்தார்.
“நான் நேரு கோளரங்கத்தில் பணியில் சேர்ந்த பிறகு பல பள்ளியிலிருந்து மாணவர்கள் பார்வையிட வந்தனர். அப்போது தான் வான்வெளி தொடர்பான பல விஷயங்கள் பொதுமக்கள் அறிந்திருக்கவில்லை என்பதை நான் அறிந்தேன். உதாரணத்திற்கு, சூரியன் ’பால்வீதி’யின் மையப்பகுதியைச் சுற்றிச் சுழலும் என்பதைக்கூட பலர் அறியாமல் இருந்தனர். இதனையறிந்த பின்பு நான் பள்ளிகளுக்கு வான்வெளி பற்றி மாணவர்களுக்குப் பாடம் எடுப்பதற்கு சர்குலர் அனுப்பினேன். தொலைநோக்கி வழியாக மாணவர்களுக்கு வான்வெளியைக் காட்சிப்படுத்துவதற்கு முயற்சிகளை முன்னெடுத்தேன். தொலைநோக்கி வழியாக வான்வெளியைப் பார்ப்பது இரவு 7 மணி முதல் 9 மணி வரைதான் சாத்தியம்.

அதனால் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு அவை எட்டாக்கனிகள் ஆகிவிட்டன. அதனையடுத்து ஹவுசிங் சொசைட்டிகளுக்குச் சென்று வான்வெளி குறித்து அனைத்துத் தரப்பு மக்களுக்கும் விரிவாகக் கூறினேன். வான்வெளி தொடர்பான பாடத்திட்டங்கள், உரைகள் அனைத்தும் மாணவர்களுக்கானது என்ற கண்ணோட்டத்தில் மக்கள் இருந்தனர். வானியல் என்பது அறிவியல். அதனை மாணவர்கள்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை.
வானியல் குறித்து அனைத்துத் தரப்பினரும் கற்றுக்கொள்ள வேண்டும். நான் இதுபோன்று கற்றுக்கொடுப்பதற்குப் பணம் எதுவும் எதிர்பார்க்கவில்லை. நான் வான்வெளி பற்றிக் கற்றுக்கொண்டதை அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில்தான் செயல்பட்டுவருகிறேன்” என்றவர் கண்ணில் அத்தனை பரவசம்.
“1994 ஆம் ஆண்டில் ஒரு நாள் மும்பையில் பொதுமக்களுக்கு வானில் தோன்றிய வால்நட்சத்திரத்தைத் தொலைநோக்கி வழியாகக் காட்சிப்படுத்திக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு பெண் என்னிடம் வந்து தொலைநோக்கி வழியாக அதனைப் பார்த்துவிட்டு ‘உங்களைப் பற்றி நான் எழுதட்டுமா?’ என்று கேட்டார்.
நான் முழுமனதோடு ஒப்புக்கொண்டேன். என்னைப் பற்றி ‘மிட் டே’ பத்திரிகையில் எழுதினார். அதனை எழுதியவர் இன்று பிரபலமாக அறியப்படும் எழுத்தாளர் ’ஷோபா டே’ தான்” எனப் பெருமிதம் கொண்டவர், “மும்பையுடன் நிறுத்திவிடக் கூடாது என்பதை எண்ணி இந்தியா முழுவதும் சென்று அனைவருக்கும் கற்றுக்கொடுக்கத் தொடங்கினேன். இதுவரை 4,000 இடங்களுக்குச் சென்று வான்வெளி குறித்து மக்களுக்கு எடுத்துரைத்திருக்கிறேன்.
நகர்ப்புறங்களைக் காட்டிலும் கிராமப்புறத்தில் பலர் அதிக அளவில் வான்வெளி குறித்துப் படிப்பதற்கு ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய பணத்தை வைத்து புத்தகங்கள் வாங்கி அனுப்புகிறேன்” என்றார்.

“நான் இப்போது சூரியன் குறித்தும் அதனைச் சுற்றியுள்ள அடுக்குகளைக் குறித்தும் ஆழமாகப் படித்து வருகிறேன். சூரியனைச் சுற்றியுள்ள அடுக்குகளைக் ‘கரோனா’ என்று அழைப்பார்கள்.
அது சூரிய கிரகணத்தின் போதுதான் தென்படும். இந்தக் கரோனா அடுக்குகள் காந்தவியலை மையப்படுத்தி பட்டாம்பூச்சி வடிவத்திலும், முட்டை வடிவத்திலும் மாற்றம்பெறும். இதுபோன்ற குறிப்புகளை மாணவர்களுக்குப் புரியும் வடிவத்தில் எளிய முறையில் கற்றுத் தர வேண்டும். வானியல் தொடர்பான பாடத்திட்டங்களை விரும்பிப் படிக்கும் மாணவர்களின் விகிதம் வருடந்தோறும் அதிகரித்துவருகிறது. இதனை ஊக்குவிக்கும் வகையில் நேரு கோளரங்கத்தில் மாணவர்களுக்கு விரிவுரைகளை ஒருங்கிணைத்துவருகிறோம்.
இன்றும் பலர் வானியல் குறித்தான பல கட்டுக்கதைகளை நம்புகிறார்கள். ஜோதிடம், கிரகணத்தின் வேளையில் மக்கள் வெளியே செல்வது, உணவுகளை உட்கொள்வது எனப் பல கட்டுக்கதைகளை மக்கள் நம்புகின்றனர். செவ்வாய் தோஷம், சனி தோஷம் போன்ற மூடநம்பிக்கைகளை மக்கள் நம்புகின்றனர். ஜோதிடத்திற்கும் வானியலிற்கும் தொடர்பில்லை என்பதைப் புரிந்துகொண்டு மக்கள் செயல்பட வேண்டும். கிரகணத்தின் வேளையில் பலர் உணவுகளை எடுத்துக்கொள்ள மறுப்பார்கள்.

ஆனால், நான் அந்த வேளையில் உணவுகளை எடுத்துக் கொள்வேன். அவர்களிடமும் ‘எடுத்துக்கொள்ளுங்கள் ,எதுவும் ஆகாது’ என்று கூறுவேன்” என, வானியல் பற்றிய கட்டுக்கதைகள் குறித்து எடுத்துரைத்தவர், “மக்கள் பலர் சமூக வலைதளங்கள் வாயிலாகச் சூரியக் குடும்பத்தின் கோள்கள் குறித்துப் பல விஷயங்களைப் புரிந்து வைத்திருக்கிறார்கள்.சூரியக் குடும்பத்தில் பூமியைத் தவிர்த்து மற்ற கோள்களில் உயிர் கிடையாது. சூரியன் போன்ற மற்ற நட்சத்திரங்களுக்கும் கிரக அமைப்புகள் இருக்கின்றன என இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் ஏதோவொரு வடிவத்தில் உயிர்கள் இருக்கலாம்” என விளக்கமளித்து விடைபெற்றார் நடராஜன்.