குஜராத்தில் ஒரு பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோ எடுத்து ஐந்து ஆண்டுகளாக மிரட்டிவந்த இஸ்லாமிய நபரை, போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.
இதில் குற்றம்சாட்டப்படும் 37 வயது இஸ்லாமியர் அசிம் நிஜாம் ஷேக் என்பவர், பாதிக்கப்பட்ட சிறுமி 16 வயதாக இருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோ எடுத்துவைத்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, இதிலிருந்து தப்பிக்க நினைத்த அசிம் நிஜாம் ஷேக், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

அதோடு பாதிக்கப்பட்ட சிறுமியை, வீடியோவை வைத்து மிரட்டி, ரோனக் படேல் என்பவருக்குத் திருமணம் செய்துவைக்கவும் திட்டம் தீட்டியிருக்கிறார். இதற்கிடையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் தங்களுடைய பெண்ணுக்கு மணமகன் பார்த்து நிச்சயம் முடித்தபோது, அசிம் நிஜாம் ஷேக் அந்த வீடியோவை மணமகனுக்கு அனுப்பி, திருமண நிச்சயத்தை நிறுத்தியிருக்கிறார். இந்த நிலையில், அசிம் நிஜாம் ஷேக் பாதிக்கப்பட்ட பெண்ணை ஐந்து வருடங்களாக மிரட்டி வந்த சம்பவம், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளித்த புகாரின் மூலம் போலீஸாருக்குத் தெரியவந்திருக்கிறது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளித்த புகாரின்படி ஜூன் 23 அன்று கெர்காம் காவல் நிலையத்தில், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 376 (2) (n), 506 (2), தகவல் தொழில்நுட்பச் சட்டம், போக்சோ சட்டம் ஆகியவற்றின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து போலீஸார், அசிம் நிஜாம் ஷேக், ரோனக் படேல் ஆகிய இருவரையும் `லவ்-ஜிஹாதின்’கீழ் கைதுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதற்கிடையில் போலீஸார் தங்களைத் தேடுவதை தெரிந்துகொண்ட அசிம் நிஜாம் ஷேக்கும், கொலை வழக்கு ஒன்றில் சிறையிலிருந்து சமீபத்தில் பரோலில் வெளிவந்த ரோனக் படேலும் தலைமறைவாகினர். இந்த நிலையில் யாருக்கும் தெரியாமல் மும்மையில் ஹோட்டலில் தங்கியிருந்த அசிம் நிஜாம் ஷேக்ககை போலீஸார் கைதுசெய்தனர்.

இது குறித்துப் பேசிய நவ்சாரி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ருஷிகேஷ் உபாத்யாய், “எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்ட பிறகு இருவரும் தலைமறைமாகிவிட்டார்கள். பின்னர், அசிம் நிஜாம் ஷேக் ஜெய்ப்பூரிலிருந்து மும்பைக்கு வந்து அங்கு ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கிறார் என்ற தகவல் எங்களுக்குக் கிடைத்தது. அதைத் தொடர்ந்து நேற்று உடனடியாக மும்பைக்கு விரைந்து அசிம் நிஜாம் ஷேக்கைக் கைதுசெய்து இங்கு அழைத்துவந்தோம். பிறகு இங்குள்ள போக்சோ நீதிமன்றம் அசிம் நிஜாம் ஷேக்கை ஒன்பது நாள்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டது” என்றார்.