உதயநிதியை எதிர்க்கும் திமுக எம்பி… இளைஞர் அணி நியமனத்தில் அதிருப்தி.. பரபரக்கும் அரசியல் களம்!

திமுகவில் இளைஞரணி செயலாளராக உதயநிதி பதவியேற்று நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை முன்னிட்டு மாவட்டம் தோறும் இளைஞர் அணிக்கு புதிய நிர்வாகிகளை நேர்க்காணல் மூலம் நியமனம் செய்து

நேற்று அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில் இளைஞர் அணி நிர்வாகிகள் நியமனத்திற்கு கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

திறமையானவர்களுக்குப் பொறுப்புகள் வழங்கப்படவில்லை என கட்சியின் மூத்த நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் செந்தில் குமார், அமைச்சர் உதயநிதிக்கு எதிராக தனது அதிருப்தியை சமூக வலைதள பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், இளைஞர் அணியை பொறுத்தவரை நியமனத்தில் சரியான முடிவுகள் எடுக்கப்படும் என உறுதியாக நம்புபவன். தர்மபுரி மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட இரு அமைப்பாளர்களை விட தகுதி வாய்ந்த நபர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. இது போல் நடந்துவிட கூடாது என பல கடிதங்கள் அளித்தும் பயனில்லை என குறிப்பிட்டுள்ளார்.

எம்பி செந்தில்குமாரின் இந்த பதிவை பார்த்த வலைதள வாசிகள் இளைஞர் அணி நிர்வாகிகள் நியமனத்தால் திமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளதாக கூறி வருகின்றன. இதனிடையே இளைஞர் அணியின் புதிய நிர்வாகிகளுக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவீட்டில், முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டில் உள்ளோம். இளைஞர் அணியை வளர்த்தெடுத்த நம் தலைவர் அவர்கள், கழகத்தின் தலைவராகவும் திராவிடமாடல் அரசை வழிநடத்திடும் முதலமைச்சராகவும் செயலாற்றும் இந்த பெருமைமிகு தருணத்தில், இளைஞர் அணியின் பொறுப்புக்கு வந்துள்ளீர்கள். இதைப் பதவியாக எண்ணாமல், பொறுப்பாக உணர்ந்து செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் மாவட்ட கழகத்தின் வழிகாட்டுதலை பெற்று திறம்பட பணிகளை தொடர வேண்டும் என்றும் உடனடியாக வாழ்த்து பெற நேரில் வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் மாவட்ட-மாநகர அமைப்பாளர்/ துணை அமைப்பாளர்கள் கூட்டத்தில் விரைவில் சந்திப்போம் என்றும் உதயநிதி ஸ்டாலின் தனது டிவீட்டில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.