சென்னை: மகளிர் உரிமை தொகையை அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் நிபந்தனைகளின்றி வழங்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவிதினகரன் ஆகியோர் வலியுறுத்திஉள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது: அண்ணாமலை: தேர்தல் வாக்குறுதியில், அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என கூறிஆட்சிக்கு வந்த திமுக அரசு, நேற்றைய தினம், மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான தகுதிகளை வெளியிட்டுள்ளது.
80 சதவீதம் பேருக்கு கிடைக்காது: அதில், குடும்பத்தின் மாத வருமானம் ரூ.20,833 மேல் இருக்கக் கூடாதாம். அடுத்ததாக, மாதம் 300 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தக் கூடாது. தமிழகத்தில் 99.6 லட்ச வீடுகள், 300 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம், தமிழக அரசு தெரிவித்திருந்தது. இக்குடும்பங்களில், மாதம் ரூ.20,833 மேல் யாரேனும் சம்பாதித்தால், அவர்களுக்கும் இந்த உரிமை தொகை வழங்கப்படாது. பின்னர் எப்படி ஒரு கோடி மகளிர் இத்திட்டத்தில் பயனடைவார்கள் என முதல்வர் கூறுகிறார்?
இந்த நகைக்கத்தக்க நிபந்தனைகளின்படி, தமிழகத்தில் 80 சதவீத குடும்பத் தலைவிகளுக்கு, உரிமைத்தொகை கிடைக்க வாய்ப்பில்லை. இதேபோல தமிழக அமைச்சர்களாக பொறுப்பேற்க, குறிப்பிடத்தக்க தகுதிகள் இருக்க வேண்டும் என தமிழக மக்கள் நிபந்தனை விதித்திருந்தால், திமுகவின் நிலைமை என்னவாகும்?
ஜி.கே.வாசன்: தேர்தலின்போது மக்களிடம் இருந்து வாக்கு வாங்குவதற்காக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 கொடுக்கப்படும் என்று அறிவித்துவிட்டு, தற்போது நிபந்தனை என்ற பெயரில் உரிமை தொகை வழங்குவதில் பாகுபாடு, பாரபட்சம், கோட்பாடு என திமுக வகுத்திருப்பது நியாயமில்லை. மகளிர் உரிமை தொகையை எவ்வித கட்டுப்பாடும் இன்றி அனைவருக்கும் கொடுப் பதே நியாயமானது.
டிடிவி தினகரன்: வாக்குறுதி அளித்தபடி அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகையை நிபந்தனையின்றி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும்.
வி.கே.சசிகலா: திமுகவினர் பெண்களுக்கு ரூ.1000 அளிப்பதை வரவேற்கும் அதேநேரத்தில் தகுதி வாய்ந்த பெண்களுக்கு மட்டும் தான் உரிமை தொகை என்பது அந்தர்பல்டி அடிப்பதாகும். குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1000 தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.