சென்னை: சிவகார்த்திகேயன் தற்போது அவரது 21வது படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக காணப்படுகிறார்.
இதனிடையே மாவீரன் பட ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.
மடோன் அஸ்வின் இயக்கியுள்ள மாவீரன், தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.
இந்நிலையில், கோலிவுட், டோலிவுட்டைத் தொடர்ந்து பாலிவுட் திரையுலகிலும் அறிமுகமாகவுள்ளாராம் சிகார்த்திகேயன்.
பாலிவுட்டில் அறிமுகமாகும் சிவகார்த்திகேயன்: விஜய் டிவியில் இருந்து சினிமாவில் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். காமெடியாக ஆங்கரிங் செய்து மக்களிடம் பிரபலமான சிவகார்த்திகேயன், மெரினா, தனுஷின் 3 படங்கள் மூலம் கோலிவுட்டில் அறிமுகம் கிடைத்தது. ஆனாலும், ஆரம்பத்தில் காமெடி மெட்டீரியல் ஹீரோவாக மட்டுமே வலம் வந்தார்.
எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினி முருகன், ரெமோ என ஒரே ஃபார்முலாவில் நடித்து வந்த சிவகார்த்திகேயன், வேலைக்காரன் படத்தில் இருந்து தனது ரூட்டை மாற்றினார். அதன்பின்னர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான கனா, நம்ம வீட்டு பிள்ளை, ஹீரோ, டாக்டர் படங்கள் சிவாவின் கேரியரில் பெரிய மாற்றத்தை கொடுத்தது.
இந்நிலையில் தற்போது மாவீரனில் இதுவரை பார்க்காத சிவகார்த்திகேயனை பார்க்கலாம் என படக்குழு தெரிவித்துள்ளது. பிரின்ஸ் படத்தைத் தொடர்ந்து மாவீரனும் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது. தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் சிவகார்த்திகேயனுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதனால், மாவீரன் படத்திற்கு தரமான ஓபனிங் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னொரு பக்கம் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் தனது அடுத்தப் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். SK 21 என்ற டைட்டிலில் உருவாகும் இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். மாவீரனைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் சிவகார்த்திகேயன் வித்தியாசமான நடிப்பில் மிரட்டுவார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், முதன்முறையாக இந்தியில் இருந்து சிவகார்த்திகேயனுக்கு அழைப்பு வந்துள்ளதாம்.
ரஜினி, கமலுக்குப் பின்னர் தற்போதைய நடிகர்களில் தனுஷும் விஜய் சேதுபதியும் பாலிவுட்டில் மிரட்டி வருகின்றனர். அவர்களை தொடர்ந்து சிவகார்த்திகேயனும் விரைவில் என்ட்ரி கொடுக்கவுள்ளாராம். இதற்காக பாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களுடன் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், விரைவில் சிவகார்த்திகேயனின் முதல் இந்தித் திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.