ஆளுநர் கட்டாயம் அரசியல் பேச வேண்டும்.. அண்ணாமலைக்கு "வேற" பிரச்சினை.. சீமான் அதிரடி

சென்னை:
“ஆளுநர் கட்டாயம் அரசியல் பேச வேண்டும்.. அனைவரும் அரசியல் பேசலாம் என்கிற போது ஆளுநர் மட்டும் ஏன் பேசக்கூடாது” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்

கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையையும் அவர் விமர்சித்துள்ளார்.

தமிழக அரசுக்கும், ஆளுநர் ரவிக்கும் இடையேயான மோதல் தற்போது பூதாகரமாகியுள்ளது. குறிப்பாக, செந்தில் பாலாஜியை அமைச்சரையில் இருந்து நீக்கியதாக ஆளுநர் ரவி அறிவித்தது முதலாகவே இரு தரப்புக்கு இடையேயான மோதல் உச்சத்தை அடைந்துள்ளது. எனினும், சிறிது நேரத்தில் தனது அறிவிப்பை ஆளுநர் வாபஸ் பெற்றார். ஆனாலும், அவர் மீது திமுகவினர் பொழிந்து வரும் விமர்சனங்கள் நின்றபாடில்லை.

இது ஒருபுறம் இருக்க, சட்ட ஆலோசனை ஏதும் பெறாமல் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கியதும், பின்னர் அவசர அவசரமாக அந்த உத்தரவை திரும்பப் பெற்றதும் ஆளுநருக்கு மட்டுமின்றி பாஜகவுக்கும் ஒருவித பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே, அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “ஆளுநர் அவரது வேலையை மட்டும் பார்த்தால் போதும்; அரசியல் பேசக்கூடாது” எனக் கூறினார்.

அண்ணாமலையின் இந்தக் கருத்து ஆளுநருக்கு எதிராக வைக்கப்பட்டதாக கருதப்படுகிறது. இந்நிலையில், அண்ணாமலையின் இந்தக் கருத்து குறித்து சீமானிடம் இன்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதலளித்து சீமான் கூறியதாவது:

ஆளுநர் மட்டுமல்ல இந்த நாட்டில் வாழும் எல்லா குடிமக்களும் அரசியல் பேச வேண்டும். அரசியல் செய்ய வேண்டும். யார் வேண்டுமானாலும் அரசியல் பேசலாம். ஆளுநர் மட்டும் அதற்கு விதிவிலக்கா? அவரும் அரசியல் பேச வேண்டும். அரசியல் என்பது ஒரு வாழ்வியல். உடலில் இருந்து உயிரை எடுப்பது எப்படியோ, அப்படித்தான் மக்களிடம் இருந்து அரசியலை எடுப்பது.

அரசியல் இல்லாமல் என்ன இருக்கிறது. அரசியல் இல்லாமல் ஆர்.என். ரவி ஆளுநர் ஆகிவிட்டாரா? ஆளுநரை நியமிப்பதே அரசியல்தானே. அண்ணாமலைக்கு பிரச்சினையே வேற. இவர் பேச வேண்டியதை எல்லாம் ஆளுநர் பேசிவிடுகிறார். இதனால் பாஜக தலைவர் நானா அல்லது ஆளுநரா என்ற குழப்பம் அண்ணாமலைக்கு வந்துவிட்டது. எங்கே ஆளுநர் நம்மை ஓவர்டேக் செய்துவிடுவாரோ என அண்ணாமலை பதறுகிறார். இவ்வாறு சீமான் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.