ஹைதராபாத்: ஆந்திர முன்னாள் முதல்வர், மறைந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் 74-வது பிறந்த நாள் நேற்று ஆந்திரா முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், “மூத்த காங்கிரஸ் தலைவரும் ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் பிறந்தநாளில் அவருக்கு எனது அஞ்சலிகள். ஆந்திர பிரதேச மக்களின் முன்னேற்றத்துக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர். அவர் எப்போதும் மக்களால் நினைவுகூரப்படுவார்” என்று கூறியிருந்தார்.
இதற்கு ஒய்எஸ்ஆர் மகளும் ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியின் தலைவருமான ஷர்மிளாநன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஷர்மிளா தனது ட்விட்டர் பதிவில், “மறைந்த ஒய்எஸ்ஆர் பிறந்தநாளை நினைவுகூர்ந்து, உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி ராகுல் காந்தி ஜி. ஒய்எஸ்ஆர் ஒரு உறுதியான காங்கிரஸ் தலைவர். தெலுங்கு மக்களுக்கான சேவையில் அவர் இறந்தார். உங்கள் தலைமையின் கீழ் நாட்டுக்கு பிரகாசமான எதிர்காலம் கிடைக்கும் என்று அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். அவரது நலத்திட்ட கொள்கைகள் இப்போதும் நாடு முழுவதும் விருப்பமான நிர்வாக முன்மாதிரியாக உள்ளது. டாக்டர் ஒய்எஸ்ஆர் உங்கள் இதயத்தில் நிலைத்திருப்பதற்கு நன்றி” என்று கூறியுள்ளார்.
இந்தப் பதிவு அவர் காங்கிரஸில் சேரத் தயாராகிவிட்டார் என்பதை உறுதி செய்துள்ளதாகவும் ஷர்மிளா விரைவில் கட்சியை கலைத்து விட்டு காங்கிரஸில் சேருவார் எனவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.