சென்னை: கர்நாடக அரசு மேகேதாட்டுவில் அணைகட்ட விடமாட்டோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம், காட்பாடி கழிஞ்சூர் ஏரி, தாராபடவேடு ஏரி ஆகிய ஏரிகளில் படகு சவாரி தொடங்குவது குறித்தும், மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நீச்சல் குளம் அமைப்பது குறித்தும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை ஆய்வு மேற்கொண்டார். பிறகு, சேர்க்காடு பகுதியில் அரசு மருத்துவமனை மற்றும் சேர்க்காடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுமானப்பணிகளை அமைச்சர் பார்வையிட்டார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘ மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசு ஆசைப்படுகிறது. ஆனால் அதற்கான உரிமை அவர்களுக்கு இல்லை. மேகேதாட்டுவில் அணையைக் கட்டக்கூடாது என கூறும் உரிமை நமக்கு உண்டு.
அணையை கட்ட பல்வேறு வழிமுறைகள் உள்ளன. மத்திய நீர்வளத்துறை, சுற்றுச்சூழல்துறை, வனத்துறை ஆகிய துறைகளின் அனுமதியை முதலில் பெற வேண்டும். இறுதியாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவும் இருக்க வேண்டும். ஆக, மேகேதாட்டுவில் அவர்களால் நிச்சயம் அணையை கட்ட முடியாது, நாங்களும் விடமாட்டோம். அரசியலுக்காக வேண்டுமானால் அணையைக் கட்டுவோம் என அவர்கள் கூறிக்கொள்ளலாமே தவிர எப்போதும் அணையை அங்கு கட்டவே முடியாது.
தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்காலத்தில் கனிமவள துறை சுமார் 1,700 கோடி ரூபாய் நஷ்டத்தில் இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்தபிறகு அதை சரி செய்து தற்போது 1,600 கோடி ரூபாய் லாபம் ஈட்டப்பட்டுள்ளது. இதுவே, திமுக அரசின் சாதனை. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தடுப்பணைகள் கட்ட அரசு திட்டமிட்டு அதை செயல்படுத்தி வருகிறது. வேலூர் மாவட்டத்தில் பாலாற்றின் குறுக்கே பல தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன. பொன்னை, கழிஞ்சூர், சேண்பாக்கம், அரும்பருத்தி, குகையநல்லூர், கோவிந்தம்பாடி, இறைவன்காடு, கவசம்பட்டு மற்றும் திருபாற்கடல் ஆகிய பகுதிகளில் தடுப்பணைகள் கட்டப்பட உள்ளன. அதிமுக ஆட்சியில் ஒரு தடுப்பணைக்கூட கட்டவில்லை. திமுக ஆட்சியில் இதை சாத்தியப்படுத்தியுள்ளோம்.
மகளிர் உரிமை தொகை ரூ.1000 வழங்குவது குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருவதை யாரும் நம்ப வேண்டாம். தகுதியானவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை நிச்சயம் கிடைக்கும்’’ என தெரிவித்தார்.