தக்காளியை பாதுகாக்க பவுன்சர்களை நியமித்த சம்பவம்: உ.பி.யில் இருவர் கைது

வாரணாசி: உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த நபர் ஒருவர் தனக்கு சொந்தமான காய்கறி கடையில் விற்பனை செய்யப்படும் தக்காளியை பாதுகாக்க பவுன்சர்களை நியமித்தார். இந்த விவகாரத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் தக்காளி அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலான வீடுகளில் சமையலில் தக்காளி பயன்படுத்துவது இப்போதைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவகங்களிலும் இதே நிலைதான். இந்தச் சூழலில் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி பகுதியை சேர்ந்த சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த அஜய் என்பவர் தனக்குச் சொந்தமான காய்கறி கடையில் தக்காளியை பாதுகாக்க பவுன்சர்களை நியமித்தார். இது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றது.

இந்த விவகாரத்தை அவதூறு வழக்காக பதிவு செய்த உத்தரப் பிரதேச மாநில போலீஸார் அஜய் மற்றும் அவரது கடையை நிர்வகித்து வந்த தந்தை மற்றும் மகன் மீது வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அந்தக் கடையில் இருந்த தந்தை மற்றும் மகன் கைது செய்யப்பட்டனர். ஆனால், அஜய் தலைமறைவாகி விட்டார்.

“தக்காளி விலை அதிகம் இருப்பதனால் மக்கள் பேரம் பேசி வாங்கி வருகின்றனர். அதைத் தடுக்கவே பவுன்சர்களை நியமித்து உள்ளோம்” என ஒரு வீடியோவில் அஜய் தெரிவித்திருந்தார். அதை தனது ட்வீட் பக்கத்தில் பகிர்ந்த சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ‘நியாயப்படி பாஜக தக்காளிக்கு Z பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார்.

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153, 291 மற்றும் 505-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட தந்தையும், மகனும் எதுவும் அறியாதவர்கள் என உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். அரசியல் ரீதியான காரணங்களுக்காக இதை அஜய் செய்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.