நிலவில் முதலில் காலடி எடுத்து வைத்தது ஓர் அமெரிக்கராக இருக்கலாம். ஆனால், அந்த நிலவின் பரப்பில் தண்ணீர் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்துச் சொன்னது இந்தியாதான். நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் இறங்கி 40 ஆண்டுகள் கழித்துச் சென்ற சந்திரயான் – 1 விண்கலம், நிலவில் தண்ணீர் இருப்பதைப் படம்பிடித்து உலகிற்குச் சொன்னது. அதனால்தான் இப்போது சந்திரயான் – 3 பயணத்தை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
ஶ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து ஜூலை 14-ம் தேதி (நாளை) செல்கிறது சந்திரயான் – 3. இது வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கினால், அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை அடுத்து நிலவில் விண்கலத்தைத் தரையிறக்கும் நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும். அது மட்டுமில்லை, நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் முதல் விண்கலம் என்ற பெருமையையும் இது பெறும்.
நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் – 3 இறங்குவதற்குச் சில முக்கியமான காரணங்கள் உண்டு. பூமத்திய ரேகை போல நிலவின் மையமாக இருக்கும் பகுதியில் விண்கலத்தை இறக்குவது சுலபம். அங்கு நிலவின் பரப்பு பெரிதாக பாறைகளோ, பள்ளங்களோ இல்லாமல் சமமாக இருக்கும். அங்கு நிலவும் வெப்பநிலையும் விண்கலத்துக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. மேலும் அங்கு போதுமான சூரிய வெளிச்சமும் கிடைக்கும். விண்கலத்தின் பெரும்பாலான உபகரணங்கள் சூரிய மின்சக்தி மூலம் இயங்க வேண்டியுள்ளது. அதற்கு சூரிய வெளிச்சம் தேவை. அதை வைத்து நீண்ட காலம் ஆராய்ச்சிகளைச் செய்ய முடியும். எனவே, பாதுகாப்பான இந்த இடத்தையே நாடி இதுவரை விண்கலங்கள் அனுப்பப்பட்டு வந்தன.

நிலவின் தென்துருவத்துக்கு எப்போதும் சூரிய வெளிச்சம் போவதில்லை. அதனால் அந்தப் பகுதி நிரந்தரமாக இருட்டில் இருக்கும். வெப்பநிலையும் -230 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக இருப்பதால், அங்கு செல்லும் எதுவுமே உறைந்து போகும் ஆபத்து உண்டு. அந்தப் பகுதியில் மோசமான பள்ளங்களும் நிறைய உள்ளன. இந்த ஆபத்துகளைத் தாண்டி அங்கு ஆராய்ச்சிகள் செய்வது சவாலான விஷயம். இந்த சவாலையே சந்திரயான் – 3 எதிர்கொள்ளப் போகிறது. நிலவைச் சுற்றிவந்த சில விண்கலங்கள், இந்த நிலவின் தென் துருவத்தில் சுவாரஸ்யமான பல விஷயங்கள் இருப்பதாகத் தகவல் தருகின்றன. குறிப்பாக, பாறைப் பள்ளங்களில் பனி படர்ந்து இருப்பதாகக் கூறப்படுகிறது.


கடந்த 2008-ல் சந்திரயான் – 1 இங்குதான் பனி இருப்பதைக் கண்டறிந்தது. எனவே, இதற்கு முன்பு யாருமே கண்டறியாத பல உண்மைகளை நிலவின் தென் துருவத்திலிருந்து இந்தியா கண்டறிய முடியும்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சந்திரயான் – 2 இங்குதான் இறங்குவதாக இருந்தது. அது தரையிறங்குவதற்கு திட்டமிட்டிருந்த இடத்தில் இறங்காமல், ஒரு சிறிய தொழில்நுட்பக் கோளாறால் 12 கி.மீ தள்ளிப் போய் இறங்கியது. அதன் விளைவாக, அது நிலவைத் தொடுவதற்கு சற்றுமுன்பு தொடர்பை இழந்து காணாமல் போனது. எனவே அந்த மிஷன் தோல்வியில் முடிந்தது.

அந்தத் தோல்வியிலிருந்து பாடங்கள் கற்றுக்கொண்டு சந்திரயான் – 3 விண்கலத்தை உருவாக்கியுள்ளனர். ஜூலை 14-ம் தேதி இங்கிருந்து கிளம்பும் சந்திரயான் – 3, ஒரு மாதத்துக்கும் மேலான பயணத்துக்குப் பின் நிலவைச் சுற்றிவந்து, ஆகஸ்ட் 23-ம் நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட சந்திரயான் – 2 இறங்குவதாக இருந்த அதே இடத்தில்தான் இதுவும் இறங்குகிறது. ஏதேனும் ஆபத்துகள் இருந்தால் அவற்றைக் கண்டறிந்து தவிர்க்கும் தொழில்நுட்பம் இருப்பதாலும், அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதாலும், சந்திரயான் – 3 வெற்றிகரமாகத் தரையிறங்கும் என்கிறது இஸ்ரோ. இந்தத் திட்டத்தை ரூ.615 கோடியில் செயல்படுத்தவுள்ளது இஸ்ரோ. பட்ஜெட்டில் ஆதிபுருஷ் படத்தை விட வெறும் ரூ.100 கோடி அதிகம் அவ்வளவே!

இந்த விண்கலத்தில் விக்ரம் என்ற லேண்டரும், பிரக்யான் என்று பெயரிடப்பட்ட ஒரு ரோவரும் இடம்பெற்றிருக்கும். பத்திரமாக நிலவில் தரையிறங்குவது லேண்டரின் வேலை. அது தரையிறங்கிய பின் அதிலிருந்து ரோவர் வெளியில் வந்து நிலவின் பரப்பில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளும். நம் பூமியின் கணக்குப்படி 14 நாள்கள் இந்த ஆய்வுகள் நடைபெறும். சந்திரயான் 2-ல் லேண்டர் தரையிறங்குவதில் தோல்வி ஏற்பட்டாலும், அதனுடன் அனுப்பப்பட்ட ஆர்பிட்டர் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இன்றும் நிலவை சுற்றி வந்து தகவல்களை சேமித்துவருகிறது அது. அதனால், இம்முறை சந்திரயான் 3-வுடன் ஆர்பிட்டர் அனுப்பப்படாது.
நிலவின் பரப்பில் இருக்கும் வெப்பநிலை, அங்கு இதற்கு முன் ஏற்பட்ட நிலநடுக்கங்கள், நிலவில் உள்ள மண்ணின் தன்மை, பாறைகளின் இயல்பு, அவற்றின் வேதியியல் கூறுகள் போன்ற தகவல்களை சந்திரயான் – 3 சேகரிக்கும். இந்த ஆராய்ச்சிகள் எதற்கு? மூன்று காரணங்கள் இருக்கின்றன.
1. நிலவின் தென் துருவத்தில் உறைந்திருக்கும் பனிக்கு அடியில் பல லட்சம் ஆண்டுகளாக பாறைகள் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கின்றன. அவற்றை ஆராய்வதன் மூலம், இந்த சூரிய மண்டலமும் பூமியும் எப்படி வடிவம் எடுத்தன என்பதை அறிய முடியும்.

2. செவ்வாய்க் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் பல நாடுகள் இறங்கியுள்ளன. பூமியிலிருந்து இதற்கான ராக்கெட்களை அனுப்புவதை விட, நிலவிலிருந்து அனுப்புவது எளிது. நிலவுக்கு வளிமண்டலம் எதுவும் இல்லை. புவிஈர்ப்பு விசையும் மிகக்குறைவு. எனவே, அங்கிருந்து ராக்கெட்களை ஏவுவதற்குக் குறைந்த ஆற்றலே தேவைப்படும். நிலவில் ஓர் ஏவுதளம் அமைத்துவிட்டால், அங்கிருந்து விண்கலங்களை எங்கும் அனுப்பலாம். பூமியின் பரப்பிலிருந்து செய்யமுடியாத பல ஆராய்ச்சிகளையும் அங்கிருந்து செய்யமுடியும்.
3. நிலவுப் பயணத்தைத் தொடர்ந்து இந்தியா பல கனவுகளை வைத்திருக்கிறது. சூரியனை ஆராய்வதற்காக ஆதித்யா என்ற விண்கலத்தை உருவாக்கும் திட்டம் இருக்கிறது. இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கான ககன்யான் விண்கலமும் உருவாக்கப்பட்டு வருகிறது. சந்திரயான் – 3 விண்கலத்தின் வெற்றி, அடுத்தடுத்து இந்த முயற்சிகளுக்கு உந்துசக்தியாக இருக்கும்.
நிலவு வசப்பட்டால், அடுத்து சூரியனும் விண்வெளியும் வசப்படும்தானே!