விவசாயிகளை மறந்து நாட்டில் பொருளாதார வளர்ச்சியை அடைய முடியாது. – பிரதமர்

ஏற்றுமதி இலக்குடன் விவசாயிகளை மேம்படுத்துவதற்காக விவசாயிகளுக்கு தேசிய ரீதியாக விதைகளை பகிர்ந்தளிக்கும் நிகழ்வை (11) மாவத்தகம, மீபேயில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், ஒரு கணம் திரும்பிப் பார்ப்போமேயானால், இன்று நாடு வீழ்ச்சி நிலையில் இருந்து மீண்டுள்ளது. இதற்கு முக்கிய சக்தியாக விளங்கியவர்கள் கிராமிய விவசாயிகள். எங்களிடம் இருக்கும் நிலத்தில் எவ்வளவு விவசாயம் செய்யப்படாதுள்ளது என்பதைக் கண்டறிய வேண்டும். தோட்டக் கம்பனிகளுக்கு வழங்கப்படுவதை விடுத்து எங்களுக்கு தந்திருக்கலாம் என விவசாயிகள் தரப்பிலிருந்து பல முறைப்பாடுகள் உள்ளன. அதற்கான காணிகளை விடுவிக்கும் சவாலை நாம் எதிர்கொண்டுள்ளோம்.

நாம் எதிர்கொண்டிருந்த அடிப்படை நெருக்கடிகளில் இருந்து நாட்டை இயங்கும் நிலைக்கு கொண்டு வந்திருக்கின்றோம். இங்கிருந்து எமது நாட்டை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்புவதற்கான விசேட இலக்குகளை நிறைவேற்ற வேண்டும். சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் அடுத்த சவாலை நோக்கிச் செல்ல நாங்கள் எதிர்பார்க்கிறோம். சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளின் உற்பத்தியை அதிகரிக்க, பொதுச் சந்தைக்கு வழங்கக் கூடிய நிவாரணங்களை உருவாக்குவது அவசியமானதாகும். அரசாங்கம் என்ற வகையில், நாட்டை நம்பகமான நிதி நிலைமைக்கு கொண்டு வருவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கொண்டு, தடை நீக்கப்பட்டு இன்று அனைத்து சர்வதேச நிதி நிறுவனங்களுடனும் செயற்படக்கூடிய நாடாக மாறியுள்ளது. விவசாயிகளை மறந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும், எதிர்பார்க்கும் பொருளாதார தன்னிறைவையும் அடைய முடியாது. எமது கிராமங்கள் உணவில் தன்னிறைவு அடையும் வகையில் நாட்டை கொண்டு செல்ல முடியும். இதனை கிராமிய மக்கள் நிரூபித்துள்ளனர்.

இன்றோடு ஒரு வருடம் ஆகிறது. நாட்டில் கொந்தளிப்பு ஏற்பட்டு, நாடு முடங்கிய நிலையில், அராஜகம் தலைதூக்கி சட்டங்கள் மதிக்கப்படாத நிலை உருவாகியிருந்தது. அரசியலை விட நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்ற உணர்வுடன் பணியாற்ற வேண்டும் என்பது இந்த காலத்தில் சாத்தியமாகியுள்ளது. தேசிய உற்பத்தியை அதிகரிப்பதே இதன் முக்கிய நோக்கமாக இருந்தது. மேலும் நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, கொழும்பு மாவட்ட செயலாளர் கே. ஜி. விஜேசிறி, சீதாவக்க மற்றும் பாதுக்க பிரதேச செயலாளர்கள், விவசாயிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.