சந்திரயான் 2 சறுக்கிய அதே இடத்தில் சாதனை படைக்கும் சந்திரயான் 3: முழு விவரம்!

நூற்றுமுப்பது கோடி இந்தியர்கள் மட்டுமல்ல உலக நாடுகளும் தங்கள் கவனத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மீது குவித்துள்ளது.

பூமியின் துணைக்கோளான சந்திரனுக்கு செல்லும் சந்திரயான் 3 விண்கலத்தை சுமந்து செல்லும் எல்.வி.எம் 3 – எம் 4 ராக்கெட் இன்று (ஜூலை 14) பிற்பகல் 2:35 மணிக்கு விண்ணில் பாய உள்ளது.

சந்திரயான் 1

2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம் தேதி இஸ்ரோ நிலவுக்கு சந்திராயன் 1 விண்கலத்தை அனுப்பியது. நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதை உறுதிபடுத்தியது சந்திரயான் 1.

சந்திரயான் 2

2019ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி சந்திரயான் 2 விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது. நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக சென்ற சந்திரயான் 2 செப்டம்பர் 6ஆம் தேதி நிலவின் வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டது. ஆனால் அதன் லேண்டர் இயந்திரமான விக்ரம் தரையில் இறங்கும் முன் 2.1 கிமீ தூரத்தில் சிக்னலை இழந்தது. தென் துருவ பகுதியில் சந்திரயான் 2 விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கியது ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டது.

திட்டமதிப்பீடு எவ்வளவு?

இன்று (2023ஜூலை 14) கிளம்பும் சந்திரயான் 3 விண்கலமும் நிலவின் தென் துருவ பகுதியில் ஆய்வை மேற்கொள்ள உள்ளது. இந்த திட்டத்திற்காக 615 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த சந்திரயான் 3 விண்கலத்தில், நிலவில் தரை இறங்கும் ‘லேண்டர் ரோவர்’ சாதனங்கள் அனுப்பப்படுகின்றன.

கவுண்ட் டவுன் ஸ்டார்ட்!

ஆந்திர மாநிலம் ஸ்ரீகரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, சந்திரயான் 3 விண்கலத்தை சுமந்தபடி, எல்.வி.எம்., 3 – எம் 4 ராக்கெட் இன்று (ஜூலை 14) பிற்பகல், 2.35 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இதற்கான, 25 மணி நேரம் 30 நிமிட கவுண்ட் டவுன் நேற்று பிற்பகல் 1 மணிக்கு தொடங்கியது.

எப்படி நிலை நிறுத்தப்படும்?

பூமியில் இருந்து புறப்படும் ராக்கெட் 173 கி.மீ துாரம் உள்ள சுற்றுவட்ட பாதையில் சந்திரயான் 3 விண்கலத்தை நிலைநிறுத்தும். அங்கிருந்து சுற்று வட்ட பாதையில் 36,500 கி.மீ துாரம் வரை விண்கலம் அனுப்பப்படும். அதன் பின்னர், உந்து இயந்திரம், ராக்கெட் போல் செயல்பட்டு, சந்திரயான் 3 விண்கலத்தை, நிலவின் சுற்றுவட்டப் பாதைக்கு திருப்பி, நிலவை நோக்கி பயணிக்க வைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

எப்போது நிலவில் தரையிறங்கும்?

ஆகஸ்ட் 23 அல்லது 24ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தில் உள்ள லேண்டர் சாதனத்தை நிலவில் தரையிறக்க, இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். அந்த நிகழ்வை காணவே உலகம் ஆவலுடன் காத்திருக்கிறது. 2019 இல் கிட்டதட்ட அனைத்தும் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில் கடைசி நேரத்தில் சிக்னல் கட் ஆனது இஸ்ரோ விஞ்ஞானிகளை மட்டுமல்லாமல் நாட்டு மக்கள் அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது. தற்போது சந்திராயன் 3 அந்த வருத்தத்தை மாற்றி சாதனை படைக்க கிளம்பிக் கொண்டிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.