ஆன்லைன் கேம்களுக்கு 28% ஜி.எஸ்.டி… அரசுக்கு வருமானம், மக்களுக்கு நஷ்டம்…!

நீண்ட காலமாக பேசப்பட்டுவந்த விஷயம் இப்போது நடைமுறைக்கு வந்தேவிட்டது. சமீபத்தில் ஜி.எஸ்.டி கவுன்சிலின் 50-வது கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், மிக முக்கியமாக கொண்டுவரப்பட்ட மாற்றம், ஆன்லைன் கேம், கேசினோ மற்றும் குதிரைப் பந்தயம் போன்றவற்றுக்கு 28% ஜி.எஸ்.டி விதிக்கப்படும் என்கிற அறிவிப்புதான்.

இந்த வரி விதிப்பு ஆன்லைன் கேமிங் துறை நிறுவனங்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. ஆன்லைன் கேமிற்கு இவ்வளவு அதிகமாக ஜி.எஸ்.டி விதிக்கப்படுவது இந்தத் துறையின் செயல்பாடுகளைப் பாதிக்கும் என்பதோடு, அந்த சுமை நுகர்வோர்களுக்குத்தான் என்று கூறியுள்ளனர்.

ஆன்லைன் கேம்

மேலும், இந்தியாவின் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கிய பயணத்தில் ஆன்லைன் கேமிங் துறை மீதான இந்த வரி விதிப்பு தடைக்கல்லாக இருக்கும் என்றும் கூறிவருகின்றனர். ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பல இதனால் கடுமையான பாதிப்புக்குள்ளாகும் என்றும், இந்தத் துறையை நோக்கிவரும் முதலீடுகள் இனிவரும் நாள்களில் குறைந்து, வேலைவாய்ப்பும் குறையும் என்றும் கூறிவருகின்றனர்.

உண்மையில் ஆன்லைன் கேமிங் துறை மீது விதிக்கபட்ட 28% ஜி.எஸ்.டி.யினால் பொருளாதார வளர்ச்சி பாதிக்குமா? உண்மை நிலவரம் என்ன என்பதைப் பார்க்கலாம்.

முதலில், ஆன்லைன் கேமிங் துறை பற்றிய முக்கியமான தகவல்களைப் பார்ப்போம். தற்போது இந்திய ஆன்லைன் கேமிங் துறையின் மதிப்பு 2.6 பில்லியன் டாலராக இருக்கிறது. இந்தியாவில் 40 கோடிக்கும் அதிகமானோர் ஆன்லைன் கேம் பயனாளர்களாக இருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 20% என்கிற அளவில் இந்தத் துறை வளர்ச்சி அடைந்து வருகிறது.

கடந்த ஐந்து வருடங்களில் 2.8 பில்லியன் டாலர் அளவிலான முதலீடுகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தத் துறையில் மேற்கொண்டுள்ளனர். கேம் 24X7, ட்ரீம் 11 மற்றும் எம்.பி.எல் ஆகிய ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் 100 கோடி டாலர் மதிப்புகொண்ட யுனிகார்ன் நிறுவனங்களாக மாறியிருக்கின்றன. ஐ.பி.எல் போன்ற விளையாட்டுப் போட்டிகளில் இந்த நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்யும் அளவுக்கு மிகப் பெரிய நிறுவனங்களாக வளர்ச்சி கண்டுள்ளன.

2022-ல் ஆன்லைன் கேமிங் நிறுவனங்களின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.160 கோடியாக இருக்கிறது. மொபைல் மற்றும் இணைய சேவையின் பயன்பாடு அதிகரிப்பினால் இந்திய ஆன்லைன் கேமிங் துறையானது வரும் ஆண்டுகளில் நல்ல வளர்ச்சியை எட்டும் என்று கூறுகிறார்கள். மேலும், இந்தத் துறையில் முதலீடு செய்வதற்காக 4 பில்லியன் டாலர் முதலீடு காத்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.

ஜிஎஸ்டி | GST

இந்த அளவுக்கு வளர்ச்சி வாய்ப்புகளை காணத் தயாராக இருக்கும் ஆன்லைன் கேமிங் துறைக்கு 28% ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டது மிகவும் பின்னடைவான ஒன்று என்று ஆன்லைன் கேமிங் நிறுவனங்களின் கூட்டமைப்பு கூறியுள்ளது. மத்திய அரசு 28% ஜி.எஸ்.டி அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.

சரி, ஆன்லைன் கேம்களுக்கு 28% ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டது சரியா என்று கேட்டால், ஒரு தரப்பினர் சரி என்றே சொல்கிறார்கள்.

”இந்தியப் பொருளாதாரம் தற்போது 3.75 ட்ரில்லியன் டாலராக இருக்கிறது. இதில் ஆன்லைன் கேமிங் துறையின் பங்களிப்பு ஒரு சதவிகிதத்துக்கும் குறைவு. மேலும், வேலைவாய்ப்பு அளவிலும் இந்தத் துறையின் பங்களிப்பு குறைவாகவே இருக்கிறது.

பொருளாதாரத்தில் அதிக பங்களிப்பு வழங்கக்கூடிய, அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய துறைகளிலேயே 28% ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, சிமென்ட், பெயின்ட், குளிர்சாதனங்கள், வாஷிங் மெஷின் போன்றவற்றுக்கெல்லாம் 28% வரி விதிக்கப்பட்டிருக்கிறது. இவற்றையெல்லாம் விட ஆனலைன் கேம் முக்கியத்துவம் வாய்ந்ததல்ல. சொல்லப்போனால் பண இழப்பை உண்டாக்குவதும், மக்களின் உற்பத்தித்திறனைக் குறைக்கக்கூடிய ஆன்லைன் கேம் விளையாட்டுகளுக்கு 28% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டிருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை” என்பது அவர்களின் வாதமாக இருக்கிறது.

ஆன்லைன் கேம்

அதே சமயம், இந்தியா போன்ற வளரும் நாட்டில் இன்னமும் மக்களின் வருமானம் என்பது பெரிய ஏற்றத்தாழ்வில்தான் இருந்துவருகிறது. ஆன்லைன் கேமிங் விளையாட்டுகளைத் தடை செய்யலாமா என்ற பேச்சுவார்த்தை பல மாநிலங்களில் நடந்துகொண்டிருக்கும் நிலையில், மத்திய அரசின் 28% ஜி.எஸ்.டி விதிப்பு நடவடிக்கை வரவேற்கத்தக்க ஒரு அம்சமாகவே சில மாநில அரசாங்கங்கள் பார்க்கின்றன.

ஆன்லைன் கேம் விளையாட்டுகளுக்கு 28% ஜி.எஸ்.டி விதித்திருப்பது அந்தத் துறையில் குறுகிய காலத்துக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எனவே, இந்தத் துறையின் வளர்ச்சியானது குறையவே செய்யும்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.