மும்பை: ஷாருக்கானின் ஜவான் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
அட்லீ இயக்கியுள்ள இத்திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகவுள்ளது.
ஷாருக்கானின் ஜவான் மூலம் முதன்முறையாக இந்தியில் அறிமுகமாகியுள்ளார் நயன்.
ஆனாலும், இந்தப் படத்திற்காக பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளாராம் நயன்தாரா.
ஜவான் படத்திற்காக நயன்தாரா சம்பளம்:
கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் நயன்தாரா. ஐயா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான நயன்தாரா, ரஜினி, விஜய், அஜித், சிம்பு, தனுஷ், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துள்ள நயன், தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் மாஸ் காட்டியுள்ளார்.
இந்நிலையில், ஜவான் திரைப்படம் மூலம் முதன்முறையாக பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் ஜோடியாக நடித்துள்ளார். அட்லீ இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ஜவான், செப்டம்பர் 7ம் தேதி வெளியாகிறது. இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் ரிலீஸாகவுள்ள இந்தப் படத்தில் நயன்தாரா கேரக்டருக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுத்துள்ளாராம் அட்லீ.
கடந்த சில வருடங்களாகவே சரியான கம்பேக் இல்லாமல் திணறி வரும் நயன்தாரா, ஜவான் படத்தில் ரீ-என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான ஜவான் ட்ரெய்லரிலும் நயன்தாராவின் கெட்டப் ரசிகர்களிடம் அதிக கவனம் ஈர்த்திருந்தது. இந்நிலையில் இப்படத்திற்காக நயன்தாரா வாங்கிய சம்பளம் குறித்து தற்போது தெரியவந்துள்ளது.

அதன்படி ஜவான் படத்திற்காக நயன்தாராவுக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம். பல வருடங்களாக ஹிட் படம் கொடுக்காமல் இருந்தாலும் நயன்தாராவின் மார்க்கெட் கொஞ்சம் கூட குறையவில்லை என்றே கூறப்படுகிறது. அதேநேரம் ஜவான் திரைப்படம் சூப்பர் ஹிட்டானால் நயன்தாராவுக்கு அடுத்தடுத்து மேலும் பல வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், ஜவான் படத்திற்காக விஜய் சேதுபதிக்கு 20 கோடி ரூபாயும், இசையமைப்பாளர் அனிருத்துக்கு 8 கோடி ரூபாய் வரையும் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம். இந்நிலையில், ஜவான் படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ள தீபிகா படுகோனேவுக்கும் 10 முதல் 15 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.