கும்பகோணம்: கும்பகோணத்தில் நடிகர் வடிவேலுவின் காமெடி காட்சி போல சூப்பர் மார்க்கெட்டில் நூதன மோசடி நடைபெற்றுள்ளது. வியாபாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த மோசடி எப்படி அரங்கேறியது என்பது குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்.
சமீப காலமாக புதுபுது வழிகளில் பல்வேறு நூதன மோசடிகள் அரங்கேறி வருகின்றன. மக்கள் கொஞ்சம் அசந்தால் கூட ஏமாறும் நிலைதான் இன்று உள்ளது. அதிக வட்டி தருவதாக கூறி பணத்தை முதலீடு செய்ய சொல்லி மொத்தமாக பணத்தோடு எஸ்கேப் ஆவது.. பரிசு பொருள் விழுந்து இருப்பதாக கூறி பணத்தை கட்ட சொல்லி ஏமாற்றுவது என பல யுக்திகளை கையாண்டு மோசடிகள் நடக்கிறது.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும் கும்ப கோணத்தில் வடிவேலு நகைச்சுவை பாணியில் ஒரு வித நூதன மோசடி நடந்துள்ளது. வடிவேலு படத்தில் 250 மூட்டை அரிசி தேவைப்படுவதாகவும் அதற்கு முன்பாக ஒரு கிலோ சாம்பிள் வேண்டும் என்று கடைக்காரரிடம் கேட்டு சாம்பிள் அரிசியை கொண்டு போய் தனது கடையில் கொண்டு போய் விற்பனை செய்வார். நகைச்சுவைக்காக இந்த மோசடி காட்சிகள் இருக்கும். கிட்டத்தட்ட இதற்கு நிகராக கும்ப கோணத்தில் ஒரு நூதன மோசடி நடைபெற்றுள்ளது. அது குறித்த விவரத்தை பார்ப்போம்.
கும்பகோணத்தில் உள்ள மோதிலால் தெருவில் சூப்பர் மார்க்கெட் ஒன்று உள்ளது. வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் உள்ளிட்டவை அங்கு விற்பனை செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்தால் வீட்டிற்கே கொண்டு டெலிவரியும் செய்கிறார்கள். அந்த வகையில், அந்த சூப்பர் மார்க்கெட்டிற்கு 7 மூட்டை உடனடியாக தேவைப்படுவதாக போனில் பேசிய ஒருவர் உடனடியாக டெலிவரி செய்யுமாறும் கேட்டு இருக்கிறார்.
உடனடியாக சூப்பர் மார்க்கெட் மேலாளரும் போனில் ஆர்டர் கொடுத்தவர் சொன்ன முகவரிக்கு 7 மூட்டை அரிசிகளை கொண்டு போய் கொடுக்க சொன்னார். கடையில் உள்ள 2 சேல்ஸ்மேன்கள் 7 மூட்டை அரிசிகளையும் பைக்கில் எடுத்துக் கொண்டு ஆர்டர் கொடுத்தவர் சொன்ன முகவரியான கும்பகோனம் பந்தடி மேடை பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு நின்று கொண்டிருந்த நபர், ஆர்டர் கொடுத்தது தான் எனவும், 6 மூட்டை அரிசியை இங்கே இறக்கி வைங்க… ஒரு மூட்டையை மட்டும் எனது நண்பர் வீட்டிற்கு கொண்டு போய் கொடுக்க வேண்டு என்று கூறி ஒரு முகவரியையும் கூறியிருக்கிறார். டெலிவரி செய்து விட்டு வாருங்கள் பணத்தை கொடுக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். இதனை நம்பி சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள் இருவரும் அந்த முகவரிக்கு சென்றுள்ளனர். ஆனால், அப்படி யாரும் அங்கு இல்லாததால், 2 பேரும் மீண்டும் 6 மூட்டை அரிசி இறக்கி வைத்த இடத்திற்கு சென்றனர்.
ஆனால், அங்குதான் அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில், ஆர்டர் கொடுத்த நபரும் இல்லை.. 6 மூட்டை அரிசியும் இல்லை. இதனால், ஏதோ தவறாக நடக்கிறது என்பதை அறிந்த கடை ஊழியர்கள் உடனடியாக சூப்பர் மார்க்கெட் மேலாளருக்கு போன் செய்தனர். சூப்பர் மார்க்கெட் மேலாளர் உடனடியாக காவல்துறையிடம் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகிறார்கள்.
கும்பகோணத்தில் நடைபெற்ற இந்த நூதன மோசடி வியாபாரிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற மோசடியில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து உரிய நடவடிக்கையை போலீசார் எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.