புனே : நாடு முழுதும் தக்காளி விலை உயர்ந்து வரும் சூழலில், மஹாராஷ்டிராவின் விவசாயி ஒருவர் தக்காளி விற்று ஒரே மாதத்தில் கோடீஸ்வரராக மாறியுள்ளார்.
மஹாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள ஜுன்னார் கிராமத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது.
இங்குள்ள விவசாயிகள் காய்கறி பயிர்களை விளைவித்து, நாராயண்கஞ்ச் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர்.
இப்பகுதியில் வசிக்கும் துக்காராம் பாகோஜி, தன் 12 ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிரிட்டார்.
கடந்த மூன்று மாதங்களாக மகன் ஈஸ்வர், மருமகள் சோனாலி உதவியுடன் தக்காளி செடிகளை பராமரித்து வந்த துக்காராம், விளைச்சல் அதிகரித்ததை அடுத்து சுற்றியுள்ள சந்தைகளில் விற்பனை செய்தார்.
ஒரு பெட்டியில் 20 கிலோ தக்காளி இருக்கும் நிலையில், அதை 2,100 ரூபாய்க்கு அவர் விற்றார். அதே விலைக்கு, 900 பெட்டிகளை விற்ற துக்காராம் ஒரே நாளில் 18 லட்சம் ரூபாய் சம்பாதித்தார்.
இதேபோல், கடந்த ஒரு மாதமாக தக்காளியின் தரத்துக்கு ஏற்ப ஒரு பெட்டியை 2,400 ரூபாய் வரை அவர் விற்பனை செய்துள்ளார்.
இதனால், கடந்த ஒரு மாதமாக தக்காளியை விற்றே, துக்காராம் கோடீஸ்வரராக மாறியுள்ளார்.
ஜுன்னார் கிராமத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள், தக்காளி பயிரிட்டு விற்பனை செய்ததை அடுத்து, அங்கு பலர் லட்சாதிபதிகளாக மாறி உள்ளனர்.
மஹாராஷ்டிரா மட்டுமின்றி அதன் அண்டை மாநிலமான கர்நாடகாவில் உள்ள கோலாரைச் சேர்ந்த விவசாயிகள், தக்காளி யால் பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்