தருமபுரி: தருமபுரி அடுத்த செட்டிகரை பகுதியில் நேற்று (ஜூலை 16) மாலை கார் ஒன்று தீ பற்றி எரிந்தது.
தருமபுரி அடுத்த செட்டிகரை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவருக்கு சொந்தமான காரை இவரது உறவுக்கார இளைஞர்கள் சிலர் அதே பகுதியில் உள்ள ஒரு மைதானத்திற்கு எடுத்துச் சென்று ஓட்டி பழகும் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக காரில் இருந்து புகை கிளம்பி உள்ளது. இதைக் கண்டு அப்பகுதியில் இருந்த சிலர் கார் பழகும் பயிற்சியில் ஈடுபட்டவர்களை எச்சரித்துள்ளனர். உடனே அவர்கள் காரை நிறுத்திவிட்டு காரில் இருந்து இறங்கி ஓடியுள்ளனர். சற்று நேரத்தில் கார் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் உடனடியாக தருமபுரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் கார் முழுமையாக எரிந்து சேதமானது. இந்த சம்பவம் குறித்து தருமபுரி நகர காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
