சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) தினமும் குடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்த ரஜினிகாந்த் எப்படி மீண்டார் என தெரியவந்திருக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக இருக்கிறார். நடத்துநராக வாழ்க்கையை தொடங்கியவர் இன்று தமிழ் சினிமாவை வழிநடத்திக்கொண்டிருக்கிறார். ஸ்டைல், அழகு, திறமை அனைத்தும் கொண்ட ரஜினிதான் இன்றைய பல ஹீரோக்களின் ரோல் மாடல். இன்னும் சொல்லப்போனால் பலரும் ஆசைப்படுவது ரஜினியின் நாற்காலிக்குத்தான். ஆனால் அந்த நாற்காலி இன்னும் பல ஆண்டுகளுக்கு அவரிடம் மட்டுமே இருக்கும்.
ஜெயிலர்: கடைசியாக ரஜினி நடித்த தர்பார், அண்ணாத்த ஆகிய படங்கள் தோல்வியை சந்தித்தன. இதன் காரணமாக அவரது சம்பளம் குறைந்துவிட்டதாகவும், சூப்பர் ஸ்டார் நாற்காலி ஆட்டம் கண்டுகொண்டிருப்பதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. தோல்விக்கு பின் ரஜினிகாந்த் மீண்டு வருவது எப்போதும் நடக்கக்கூடிய ஒன்றுதான். அந்தவகையில் நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படம் ரஜினிக்கு கம்பேக்காக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயிலர் ரிலீஸ்: அதனை பூர்த்தி செய்யும் விதமாகத்தான் படத்தின் ரிலீஸ் அறிவிப்போடு வெளியான க்ளிம்ப்ஸ் அமைந்தது. அதேபோல் நாளை வெளியாகவிருக்கும் இது டைகரின் கட்டளை பாடலுக்கான ப்ரோமோவும் தீயாக இருக்கிறது. நிச்சயம் இது தலைவருக்கு கம்பேக் படமாக அமையும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை என அவரது ரசிகர்கள் அறுதியிட்டு சொல்கின்றனர். படமானது ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

லால் சலாம்: ஜெயிலர் படத்துக்கு பிறகு அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்திருக்கிறார் ரஜினி. மொய்தீன் பாய் கேரக்டரில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். அந்தப் படத்தின் ஷூட்டிங்கும் சமீபத்தில் முடிந்தது. இந்தப் படத்தை முடித்துவிட்டு ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ஒரு படம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். தற்போது ஓய்வுக்காக மாலத்தீவுகளுக்கு சென்றிருக்கிறார்.
ட்ரெண்டாகும் ரஜினி பேச்சு: ரஜினிகாந்த் தன்னுடைய கரியர் ஆரம்பகாலத்தில் பல சர்ச்சைகளை சந்தித்தவர். அதில் ஒன்றுதான் குடிப்பழக்கம் மற்றும் சிகரெட். ரஜினிகாந்த் குடித்துவிட்டு விமான நிலையத்தில் பெரிய பிரச்னை செய்தார் என்றெல்லாம் ஒரு பேச்சு ஓடிய காலம் உண்டு. இந்நிலையில் ரஜினிகாந்த் தனக்கு இருந்த பழக்கம் குறித்தும் அதிலிருந்து எப்படி மீண்டார் என்பது குறித்தும் பேசியிருக்கும் வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.
என்ன பேசினார் ரஜினிகாந்த்?: அந்த வீடியோவில் பேசிய அவர், “நான் நடத்துநராக இருந்தபோது தவறான நண்பர்களின் பழக்கம் கிடைத்தது. இதனால் தினமும் மது அருந்தும் பழக்கம் வந்தது. அதேபோல் இறைச்சி சாப்பிடாமல் என்னால் இருக்கவே முடியாது. பிடித்த சிகரெட்டுகளுக்கும் கணக்கே கிடையாது. நடத்துநராக இருந்தபோதே அப்படி இருந்தேன் என்றால் நடிகனாகி புகழும், பணமும் சேர்ந்த பிறகு எப்படி இருந்திருப்பேன் என யோசித்துப்பாருங்கள்.

மனைவிதான் என்னை திருத்தினார்: ஆட்டுக்கால் பாயாவும், ஆப்பமும் தினமும் காலையில் எனக்கு வேண்டும். இறைச்சி இல்லாத உணவை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. சைவம் சாப்பிடுபவர்களை கேவலமாக பார்த்தேன். இந்த மன நிலையிலிருந்து என்னை வெளியே கொண்டு வந்தவர் எனது மனைவிதான் இப்போது எனக்கு வயது 72 ஆகிறது. நான் இவ்வளவு ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு காரணம் எனது மனைவி லதாதான்” என்றார்.