உலக அளவில் இன்றுவரை மிகப் பிரபலமானதாகக் கருதப்படும் டைட்டானிக் கப்பல் 1912-ம் ஆண்டில், அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவம் நடந்து 111 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இன்றும் டைட்டானிக் கப்பல் குறித்த ஆராய்ச்சிகளும், நீர்மூழ்கிக் கப்பல் மூலம் அதைக் காணச் சுற்றுலாப் பயணிகள் செல்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் கடந்த மாதம் 18-ம் தேதி சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் ‘OceanGate Expeditions’ என்ற நிறுவனம் டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளைக் காண்பதற்காக டைட்டன் என்ற நீர்மூழ்கிக் கப்பலில் ஐந்து நபர்களை அழைத்துச் சென்றது. ஐந்து பேருடன் கடலுக்குள் சென்ற இந்த நீர்மூழ்கிக் கப்பல் திடீரென காணாமல் போனது. தேடுதல் பணியில் கப்பற்படையினர் ஈடுபட்டனர். பின் கப்பலில் பயணித்த ஐவரும் உயிரிழந்துவிட்டதாக அறிவித்தது அமெரிக்கக் கடலோரக் காவல்படை. இந்தச் சம்பவம் அனைவரது மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதனிடையே ‘டைட்டானிக்’, ‘அவதார்’, ‘டெர்மினேட்டர்’ படங்களை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன், இந்த விபத்தை அடிப்படையாகக் கொண்டு படம் ஒன்றை இயக்கவிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. இந்நிலையில் அவரே இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.
I don’t respond to offensive rumors in the media usually, but I need to now. I’m NOT in talks about an OceanGate film, nor will I ever be.
— James Cameron (@JimCameron) July 15, 2023
இதுகுறித்து ட்வீட்டரில் பதிவிட்ட அவர், “பொதுவாக ஊடகங்களில் வரும் அவதூறான வதந்திகளுக்கு நான் விளக்கமளிப்பதில்லை. ஆனால் தற்போது பரவிய இந்த வதந்திக்குப் பதிலளித்து ஆக வேண்டும். நான் OceanGate தொடர்பாகப் படம் இயக்குவது பற்றி எந்த விவாதமும் நடத்தவில்லை. எதிர்காலத்திலும் அப்படியொரு திட்டம் எனக்கு இல்லை” என்று தெரிவித்திருக்கிறார்.