அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என எதிர்க்கட்சிகள் தீர்மானமாக இருப்பதை அறியமுடிகிறது. அதன் காரணமாக கடந்த மாதம் பாட்னாவில் பீகார் முதல்வர் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, கர்நாடக மாநிலம், பெங்களூருவில் காங்கிரஸ் தலைமையில் இரண்டு (17, 18-ம் தேதிகளில்) நாள்கள் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று மாலை பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், நாளை காலை 11 மணிக்கு பெங்களூருவில் காங்கிரஸ் தலைமையில் நடைபெறவிருக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதா தளம், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, புரட்சிகர சமத்துவ கட்சி, அகில இந்திய ஃபார்வர்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, கேரள காங்கிரஸ் (ஜோசப்), கேரள காங்கிரஸ் (மாணி), மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட 26 கட்சிகள் பங்கேற்கின்றன.
எதிர்க்கட்சிகளின் இந்தக் கூட்டணியை பா.ஜ.க தரப்பு கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, “டெல்லியில் பா.ஜ.க-வின் மாபெரும் பலத்தை நிரூபிக்கும் வகையில் கூட்டம் நடத்தப்படும்.

பெங்களூரில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை கூட்டத்துக்கு இணையாக அந்தக் கூட்டம் நடத்தப்படும். அதில் 38 கட்சிகள் பங்கேற்கும். பல ஆண்டுகளாக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வரம்பும் அதன் நோக்கமும் உயர்ந்துக்கொண்டே வருகிறது. நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும் என்ற மக்களின் ஆசை, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் விரிவாக்கத்துக்கு வழிவகுத்திருக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் கடந்த ஒன்பது ஆண்டுகளில் கொடுக்கப்பட்ட நல்லாட்சியைத் தொடர வேண்டும் என்ற ஆசையை இது சாத்தியமாக்கும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.