சென்னை: vaali (வாலி) ஏன்யா நீ நடுவரா இருந்தா கண்ணகி மேல் என்பியா இல்லை மாதவி மேல் என்பியா’ என கண்ணதாசன்கேட்டிருக்கிறார். அதற்கு வாலியோ ரெண்டு பேருமே மேல் இல்லை ஃபீமேல் (Female)என்றிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் பாடல்களை எப்போதும் பிரிக்கமுடியாது. ஏனெனில் பாடல்கள் தமிழர்களின் உணர்வுகளில் கலந்த ஒன்று. இதனால் சினிமாவில் பல பாடலாசிரியர்கள் இருந்திருக்கிறார்கள்; இருக்கிறார்கள். அவர்களில் எப்போதும் முக்கியமானவர் பாடலாசிரியர் வாலி. அவரிடம் எந்த ஜானர் கொடுத்தாலும் அந்த ஜானரில் ஜாலியோ, தத்துவமோ எதுவாக இருந்தாலும் அதகளம் செய்துவிடுவார்.
கண்ணதாசன், உடுமலை நாராயண கவி, மருதகாசி உள்ளிட்டோர் கோலோச்சியிருந்த காலத்தில் பாடல்கள் எழுத சினிமாவுக்குள் வந்தவர் பாடலாசிரியர் வாலி. ஆரம்பத்தில் ரொம்பவே சிரமப்பட்ட வாலி ஒருவழியாக பலராலும் அறியப்படும் பாடலாசிரியர் ஆகி பிறகு வெகு பிரபலமாகிவிட்டார். ஒருகட்டத்தில் வாலி எழுதிய பல பாடல்கள் கண்ணதாசன் எழுதியது என்ற நினைப்பு ரசிகர்களிடம் எழுந்தது. ஏன் கண்ணதாசனேகூட வாலியிடமே நீ எழுதிய பாடலை நான் எழுதிய பாடல்னு நினைச்சிருக்கேன் என கூறினார்.
சிவாஜி டூ சிவா: சிவாஜி – எம்ஜிஆருக்கு எழுத ஆரம்பித்த வாலி ரஜினி – கமல், விஜய் – அஜித், சிம்பு – தனுஷ், விஜய் சேதுபதி – சிவகார்த்திகேயன் என ஐந்து தலைமுறைகளுக்கு பாடல் எழுதிய பெருமைக்கு சொந்தக்காரர். எழுதினார் என்றால் மேம்போக்காக இல்லை அந்தத் தலைமுறைக்கு எதெல்லாம் செட் ஆகுமோ அதையெல்லாம் தனது பாடல்களுக்குள் வைத்தவர்.
வாலிப கவிஞர் வாலி: வாலிக்கு வயதானாலும் அவரது வரிகளுக்கு எப்போதும் வயது ஆனதில்லை. கம்ப்யூட்டரில் காதல் செய்யும் காலம் இனி என தற்போது காதல் சென்றுகொண்டிருக்கும் நடைமுறையை முன்னமே கணித்து கூறியவர் வாலி. அதேபோல் பாஸ்போர்ட்டே இல்லாத கவிஞர். எந்த வெளிநாட்டுக்கும் செல்லாதவர்.

ஆனால் அவரால் நியூயார்க் நகரத்தை தனது பாடலுக்குள் வர்ணிக்க முடிந்தது. மேலும் உசைன் போல்ட்டை போல் நில்லாமல் ஓடு என சொல்லி போல்ட்டை கோடம்பாகத்துக்குள் கொண்டு வந்து நிறுத்தியவர். கவிஞர் வாலி தனது இறுதிக்காலம்வரை அப்டேட்டாகவும், இளமையாகவும் தனது வரிகளை எழுதியதால்தான் அவரை அனைவரும் வாலிப வாலி என்று அழைக்கிறார்கள்.
அப்படி இருந்ததால்தான் பல இயக்குநர்களுடன் நெருக்கமாக அவரால் பயணிக்க முடிந்தது. பலருக்கு பாடல்களையும் எழுத முடிந்தது. வாலி சிறந்த பாடலாசிரியர், கவிஞர் மட்டுமில்லை. அவரது டைமிங் பதில்கள் அனைத்துமே எல்லோரையும் அசரடிப்பவை. அப்படி சில விஷயங்களை அவரது நினைவு நாளான இன்று நினைவுகூர்வோம்.
வாலியின் Thug லைஃப்: ஒருமுறை அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகம் பற்றிய கவியரங்கம் நடந்திருக்கிறது. கவியரங்கம் தொடங்குவதற்கு முன்னதாக கண்ணதாசன் வாலியிடம், ‘ஏன்யா நீ நடுவரா இருந்தா கண்ணகி மேல் என்பியா இல்லை மாதவி மேல் என்பியா’ என கேட்டிருக்கிறார். அதற்கு வாலியோ ரெண்டு பேருமே மேல் இல்லை ஃபீமேல் (Female) என்று சொல்வேன் என கூறியிருக்கிறார். அதனை கேட்ட கண்ணதாசன் ஆச்சரியப்பட்டுப்போயிருக்கிறார்.
நாய்கள் ஜாக்கிரதை: அதேபோல் வைதேகி காத்திருந்தாள் படம் ஆரம்பித்த சமயம். வாலியை பாடல் எழுத வைக்க இளையராஜா திட்டமிட்டிருக்கிறார். நாளை பாடல் எழுத வேண்டும் என சொல்வதற்காக தனது ஸ்டூடியோவில் இருந்து சுந்தரம் என்பவரை வாலியின் வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார். இரவு 11 மணி அளவில் இயக்குநர் சுந்தரராஜனும் அங்கு சென்றிருக்கிறார். ஆனால் யாரும் உள்ளே போகவில்லை.
ஏதோ சத்தம் கேட்டு வாலி வெளியே வர; இவர்கள் நின்றதை பார்த்து ஏன்யா உள்ளே வரல என கேட்க; சுந்தரம், சுந்தரராஜன் உள்ளிட்டோர் இல்ல நாய்கள் ஜாக்கிரதைனு பலகை இருக்கே அதான் வரல என்றிருக்கின்றனர். அதற்கு வாலியோ, யோவ் இங்க இருக்குறது குட்டி நாயியா. வரவங்க யாரும் அந்த நாய்க்குட்டிய மிதிச்சிடக்கூடாதுல அதனாலதான் நாய்கள் ஜாக்கிரதைனு போர்டு வெச்சிருக்கேன் தக் பதிலை கொடுத்திருக்கிறார்.
ரஜினிக்கே Thug கொடுத்த வாலி: ரஜினிகாந்த் தனது மகள் சௌந்தர்யாவின் திருமண பத்திரிகையை வைக்க வாலி வீட்டுக்கு சென்றிருக்கிறார். பத்திரிகையை எல்லாம் வைத்துவிட்டு இரண்டு பேரும் பேசிக்கொண்டிருக்கும்போது ரஜினியிடம் வாலி, எந்திரன் பட விழாவுல உன்னுடைய பேச்சை கேட்டேன்யா; எம்ஜிஆருக்கு வாலி மாதிரி எனக்கு வைரமுத்துனு நல்லா பேசுன.
உனட்ட ஒன்னு கேட்குறேன் நான் எம்ஜிஆருக்கு, நான் ஆணையிட்டால், மூன்று எழுத்தில் என் மூச்சு இருக்கும், தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று போன்ற பாட்டெல்லாம் எழுதுனேன். இதையெல்லாம் எம்ஜிஆர் மட்டும்தான் பாட முடியும். இப்படி நீ மட்டுமே பாடுற மாதிரி வைரமுத்து உனக்கு ஏதாவது பாட்டு எழுதிருக்காரா? நீ எம்ஜிஆரா மாறு; ஆனா வைரமுத்துவை வாலியாக மாற்றாதே என ஓபனாக கூறியிருக்கிறார்.
இப்படி பல விஷயங்களை கர்வமாகவும் நகைச்சுவையாகவும் அணுகிய வாலிப கவிஞர் வாலியை அவரது நினைவு தினத்தில் பெருமையோடு நினைவுகூர்கிறது தமிழ் ஃபில்மிபீட்