தெஹ்ரான்:ஈரானில், பெண்கள் ஆடை விதிமுறைகளை பின்பற்றுவதையும், ‘ஹிஜாப்’ அணிவதையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் அறநெறி போலீஸ் எனப்படும் சிறப்பு போலீஸ், மீண்டும் பணியை துவங்கியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மேற்காசிய நாடான ஈரானில், பெண்கள் தங்கள் தலையைச் சுற்றி, ‘ஹிஜாப்’ எனப்படும் துணியை அணிவதும், கழுத்து முதல் பாதம் வரை மறைக்கக் கூடிய முழுநீள ஆடை அணிவதும் மத வழக்கப்படி கட்டாயமாக பின்பற்றப்படுகிறது.
இந்த ஒழுக்க விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க, அறநெறி போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், பொது இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர்.
விதிமுறைகளை மீறி ஆடை அணிந்து வரும் பெண்களை எச்சரிக்கின்றனர். தொடர்ந்து விதிமுறைகளை மீறினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கின்றனர்.
இப்படி, ஈரான் அறநெறி போலீசிடம் சிக்கிய மாஸா அமினி, 22, என்ற பெண், 10 மாதங்களுக்கு முன் போலீஸ் காவலில் உயிரிழந்தார். போலீசார் அடித்ததால் அவர் இறந்ததாக கூறப்பட்டது.
இது, ஈரான் பெண்கள் மத்தியில் மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அரசுக்கு எதிராக அவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட 600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, ஈரானிய பெண்கள் பொது இடங்களில் ஹிஜாப் அணிவதை தவிர்த்தனர். இது அந்நாட்டு ஆட்சியாளர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது.
இந்த விவகாரம் உலக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, அறநெறி போலீஸ் படையை அந்நாட்டு அரசு திரும்பப் பெற்றது.
இந்நிலையில், ஈரானில் பெண்கள் ஹிஜாப் அணிவது முற்றிலுமாக ஒழிந்து விட்டதை அடுத்து அதை மீண்டும் நடைமுறைபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
இதையடுத்து, அறநெறி போலீசாரை மீண்டும் களம் இறக்கியுள்ளது. இதற்கு நாடு முழுதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆனாலும், அரசு அதை எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல், பெண்களின் சுதந்திரத்தை ஒடுக்கும் பணியில் தீவிரமாக களம் இறங்கியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்