புதுடில்லி:யமுனை நதியில் வெள்ளத்தின் அளவு சற்று குறைந்தாலும், அபாயக் கட்டத்தை விட இரண்டு மீட்டர் அதிகமாக 205.33 மீட்டராக வெள்ளத்தின் அளவு நீடிக்கிறது.
தலைநகர் புதுடில்லி உட்பட வடமாநிலங்களில் ஜூன் 25ம் தேதி தென்மேற்கு பருவமழை துவங்கியது. ஆரம்பத்தில் லேசான மழை பெய்து வந்த நிலையில் கடந்த 8 மற்றும் 9 ஆகிய நாட்களில் ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், புதுடில்லி உள்ளிட்ட மாநிலங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதனால், யமுனை நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
அதன் முழு கொள்ளளவைத் தாண்டியதால், டில்லி மாநகருக்குள் வெள்ளம் புகுந்தது. டில்லியில் பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. கரையோரத்தில் இருந்த வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
இதனால் டில்லியில் போக்குவரத்து, குடிநீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மகக்ள் கடும் அவதிப்பட்டனர். மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டன.
தேசிய பேரிடர் மீட்புப் படையினர், டில்லி மாநகராட்சி, தீயணைப்புத் துறை, போலீஸ் மற்றும் டில்லி அரசின் பல்வேறு துறைகள் களத்தில் இறங்கின. துணை ராணுவப் படையினரும் வெள்ளத் தடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
யமுனை நதியில் நேற்று முன் தினம் இரவு 11:00 மணிக்கு 206.01 மீட்டர் பாய்ந்த வெள்ளம், நேற்று காலை 8:00 மணிக்கு 205.67 மீட்டராக குறைந்தது. இருப்பினும், அபாய அளவைத் தாண்டி இரண்டு மீட்டர் அதிகமாகவே வெள்ளம் பாய்கிறது.
ஹரியானாவின் யமுனா நகரில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையின் நீர்வரத்து இரண்டு நாட்களாக குறைந்து வருகிறது.
எனவே, யமுனை நதியில் வெள்ளத்தின் அளவு மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், ஹரியானாவின் சில பகுதிகளில் கனமழை பெய்வதால், யமுனையில் வெள்ளம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சீரமைப்பு
வெள்ளம் சூழ்ந்த சாலைகளில் தண்ணீரை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வருமான வரித் துறை அலுவலக சாலை, ராஜ்காட் உட்பட மாநகரின் முக்கியச் சாலைகளில் சேறு அகற்றும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
ரிங் ரோட்டில் போக்குவரத்து மீண்டும் துவங்கியுள்ளது.
இருப்பினும் தேங்கியுள்ள சகதியால் வாகனம் ஓட்டும்போது கவனத்துடன் செல்ல வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
ஹரியானாவின் சில பகுதிகளில் 16ம் தேதி பெய்த கனமழையால், யமுனையின் நீர்மட்டம் சற்று உயர்ந்தது. எனவே, நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்கள் வீடு திரும்ப வேண்டாம் என டில்லி அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
வெள்ளம் தேங்கியிருந்த பகுதிகளில் நோய்கள் பரவாமல் இருக்க, மாநகராட்சி சுகாதாரத் துறை பணியாளர்கள், மருந்து தெளித்து வருகின்றனர்.
பள்ளிச் சீருடைகள் மற்றும் புத்தகங்களை வெள்ளத்தில் இழந்த குழந்தைகளுக்கு புதிய சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் எனவும், அதுவரை சீருடை மற்றும் புத்தகம் இல்லாமல் பள்ளிக்கு வரலாம் என அரசு தெரிவித்துள்ளது.
டில்லி அமைச்சர்கள் கோபால் ராய், இம்ரான் ஹுசைன் மற்றும் ராஜ்குமார் ஆனந்த் ஆகியோர் நிவாரண முகாம்களுக்கு சென்று ஆய்வு செய்தனர்.
சுகாதார அமைச்சர் சவுரப் பரத்வாஜ், சுவாமி தயானந்த் மருத்துவமனை மற்றும் கிச்சிரிபூரில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனை ஆகியவற்றில் செய்துள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.
டெங்கு மற்றும் மலேரியா ஆகியவற்றால் பாதிக்கப்பட்டால் உடனடியாக தீவிர சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
2 உடல்கள் மீட்பு
கிரேட்டர் நொய்டா மாகன்பூர்காதர் கிராமத்தைச் சேர்ந்த தீரஜ்,21, சஞ்சித், 17, ஆகிய இருவரும் 16ம் தேதி யமுனை ஆற்றில் குளித்தனர். சுழலில் சிக்கிய இருவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, இருவர் உடல்களையும் நேற்று முன் தினம் மீட்டனர்.
லாரிகள் வரலாம்!
யமுனையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் டில்லியில் முக்கியச் சாலைகள் மூழ்கியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டில்லியின் நான்கு எல்லைகளில் இருந்தும் அத்தியாவசியப் பொருட்கள் தவிர, மற்ற கனரக சரக்கு வாகனங்கள் டில்லி மாநகருக்குள் வர 13ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டு இருந்தது.
தற்போது, யமுனையில் வெள்ளம் சற்று குறைந்துள்ளதால், கனரக சரக்கு வாகனங்களுக்கான கட்டுப்பாடுகளை டில்லி அரசு தளர்த்தியுள்ளது. ஹரியானா, ஹிமாச்சலப் பிரதேசம், சண்டிகர், ஜம்மு-காஷ்மீர் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் கனரக வாகனங்கள் காஷ்மீர் கேட் பகுதியில் நிறுத்தப்படும். அத்தியாவசிய பொருட்களான மருந்து, காய்கறி, பழம், தானியம், பால், முட்டை, ஐஸ் ஆகியவை எடுத்து வரும் வாகனங்கள் மாநகருக்குள் வர தடை இல்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்