மகளிர் உரிமைத் தொகை – நிபந்தனைகளில் தளர்வு ஏற்படுமா? அரசு எடுக்கும் முடிவு என்ன?

மகளிர் உரிமைத் தொகைக்கு தகுதியானவர்கள், தகுதி பெற இயலாதவர்கள் யார் என்பதை கண்டறியும் விதமாக தமிழக அரசு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி பேரை இந்த திட்டத்தில் பயனாளிகளாக இணைக்க திட்டமிட்டுள்ள போதிலும் அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பார்க்கும் போது பெரும்பாலான குடும்பத் தலைவிகள் பயனடைய முடியாமல் போகும் சூழல் நிலவுகிறது.

அரசு அறிவித்த நிபந்தனைகள்!அரசு அறிவித்துள்ள பொருளாதார தகுதிகள் ஆண்டு வருமானம் ரூ.2.5 இலட்சத்திற்குக் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள் இந்த திட்டத்தில் பயன்பெற மாட்டார்கள் என்று தெரிவிக்க்கப்பட்டுள்ளது. தோராயமாக மாதம் 20,000 ரூபாய் சம்பளம் பெறுபவர்கள் என்றால் பிடித்தம் போக 18 ஆயிரம் ரூபாய் கிடைக்கப் பெறும். சென்னை போன்ற நகரங்களில் வாடகை, குழந்தைகளின் கல்வி, அன்றாடச் செலவுகளுக்கே இந்த தொகை போதுமானதாக இருக்காது எனும் போது இத்தகைய வருமான பிரிவைச் சேர்ந்தவர்கள் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியற்றவர்கள் என அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயன்பெற முடியாமல் போகும் குடும்பங்கள்!ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகளின் ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியதாரர்கள் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியற்றவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் என்று பொதுவாக வரையறுக்கப்பட்டுள்ளதும் விவாதத்தை கிளப்பியுள்ளது. லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களும் இருக்கிறார்கள். சில ஆயிரங்கள் மட்டுமே சம்பளமாக பெறும் அரசு ஊழியர்களும் இருக்கிறார்கள். எனவே அரசின் உதவி தேவைப்படும் பல குடும்பங்கள் பயன்பெற முடியாமல் போய்விடும்.
உரிமைத் தொகையின் நோக்கம் என்ன?திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடும் போது அனைத்து இல்லத்தரசிகளுக்கும் மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. குடும்பத்துக்காக வீட்டிலேயே அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ளும் குடும்பத் தலைவிகளுக்கு அவர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அப்போது கூறப்பட்டது. ஆனால் தற்போது அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள் அதன் நோக்கத்திலிருந்து விலகுவதாக உள்ளது.
மகளிர் உரிமைத் தொகை – தகுதியானவர்களுக்கு சென்று சேருமா?​​
தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்பட்ட பல திட்டங்கள் அனைத்து குடும்பங்களுக்கும் சென்று சேர்ந்துள்ளன. திராவிடக் கட்சிகளின் ஆட்சியை குறை சொல்பவர்கள் தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டும் கொடுக்க வேண்டியதுதானே என்ற வழக்கமான புகாரை வைப்பார்கள். ‘தகுதியானவர்களுக்கு சென்று சேர வேண்டும் என்றால் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். இல்லையேல் தகுதியானவர்கள் ஏதேனும் ஒருவழியில் தடுக்கப்பட வாய்ப்பு உள்ளது’ என்று திமுக ஆதரவு பொருளாதார வல்லுநர்கள் கூறிவந்தனர். ஆனால் தற்போது தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டும் என்று கூறுவதன் மூலம் இந்த திட்டம் தனது நோக்கத்தை முழுவதும் நிறைவேற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.