அமராவதி: ஆந்திராவில் கிலோ தக்காளி ரூ 50 க்கு விவசாயி ஒருவர் விற்பனை செய்ததால் அதை வாங்க 2 கிலோ மீட்டர் வரிசையில் பொதுமக்கள் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திராவில் ஒரு கிலோ தக்காளி ரூ 100 முதல் ரூ 120 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரத்து குறைவால் இந்தியா முழுவதும் தக்காளியின் விலை அதிகரித்துள்ளது.
மத்திய மாநில அரசுகள் விலையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தமிழகத்தில் ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூ 60 முதல் 80 க்கு விற்பனையாகிறது. எனினும் தக்காளி விலை குறைந்தபாடில்லை.
தக்காளி விளைச்சல் செய்யும் விவசாயிகள் இன்று பலர் கோடீஸ்வரர்களாகவும் லட்சாதிபதிகளாகவும் ஆகியுள்ளனர். அதே நேரத்தில் விலை குறைந்து தக்காளி விற்கப்படும் போது போட்ட முதலை கூட எடுக்க முடியாமல் லட்சக்கணக்கில் நஷ்டமடைந்ததையும் மறுக்க முடியாது.
20 நாட்களில் 30 லட்சத்திற்கு தக்காளி விற்பனை செய்த ஆந்திரா விவசாயி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கடப்பா நகரில் உள்ள உழவர் சந்தையில் நேற்று விவசாயி ஒருவர் தக்காளியை விற்பனைக்காக கொண்டு வந்தார். அவர் ஒரு கிலோ தக்காளி ரூ 50 க்கு என கூவி கூவி அழைத்தார்.
உடனே வேறு கடைகளுக்கு தக்காளி வாங்கச் சென்றவர்கள் அந்த விவசாயியின் கடைக்கு ஓடி வந்தனர். பின்னர் வரிசையில் நிற்குமாறு கூறியதை அடுத்து அவர்கள் வரிசையில் நின்றனர். அப்போது 2 கி.மீ. தூரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் தக்காளி வாங்கிச் சென்றனர்.
அதிகளவு மக்கள் வந்ததால் ஒருவருக்கு 3 கிலோ தக்காளிகளை விவசாயி வழங்கினார். உழவர் சந்தையில் குறைந்த விலையில் தக்காளி வாங்க அந்த பகுதியில் மக்கள் நீண்ட வரிசையில் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கிலோ 50 ரூபாய் என அவர் கொண்டுவந்த அனைத்து தக்காளிகளையும் விற்றுவிட்டார்.