‘இந்தியா’வில் உள்ள யாரும் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம்.. முதல்வர் ஸ்டாலின் நறுக்.. இந்தியா தான் 'மேட்டர்'

சென்னை:
‘இந்தியா’வில் உள்ள யாரும் அமலாக்கத்துறையின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அமலாக்கத்துறையின் பார்வை சமீபகாலமாக தமிழ்நாட்டின் மீது விழுந்திருக்கிறது. முதலில் அமைச்சர் செந்தில் பாலாஜியை டார்கெட் செய்து தனது ரெய்டு அஸ்திரத்தை அமலாக்கத்துறை பிரயோகித்தது. இதில் செந்தில் பாலாஜி கைதும் செய்யப்பட்டார்.

அதன் பின்னர், அவர் நெஞ்சு வலி எனக் கூறியதால் காவேரி மருத்துவமனையில் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே, உடல்நலம் தேறியதால் நேற்று முன்தினம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை புழல் சிறையில் அடைத்துள்ளது.

செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட அதிர்ச்சி அடங்குவதற்குள்ளாக, தற்போது உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியை தனது விசாரணை வளையத்துக்குள் அமலாக்கத்துறை கொண்டு வந்துள்ளது. அவரது 41 கோடி ரூபாய் சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனிடையே, அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கையை பாஜகவின் பழிவாங்கும் செயல் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறி வருகிறார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் மடல் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியிலிருந்து பா.ஜ.க.வையும் – அதனுடன் கூட்டு சேர்ந்து நாட்டின் ஒருமைப்பாட்டைச் சிதைப்பவர்களையும் வெளியே அனுப்பிட மக்கள் ஆயத்தமாகிவிட்டார்கள். அதனை மறைக்கத்தான் அமலாக்கத்துறை தொடங்கி அத்தனை அமைப்புகளையும் ஏவி அச்சுறுத்தும் வேலைகள் நடக்கின்றன. ‘இந்தியா’வில் உள்ள யாரும் இத்தகைய மிரட்டல்களுக்கு அஞ்சப் போவதில்லை. உண்மையான இந்தியாவின் எதிரிகள் யார் என்பதை அடையாளம் காட்ட வேண்டியதே நமது முதன்மையான பணி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த மடல் ஒருபுறம் இருக்க, அதில் உள்ள இந்தியா என்ற வார்த்தையை தனித்து தெரியும்படி முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது, பாஜகவை வீழ்த்த திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைக்க முயற்சித்து வருகின்றன. இந்த அணிக்கு ‘இந்தியா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதை தான் ஸ்டாலின் மறைமுகமாக உணர்த்தியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.