மதுரை: குண்டர் சட்ட உத்தரவில் கையெழுத்திடும் அதிகாரத்தை ஐஜிக்களுக்கு வழங்க தேவையில்லை. அந்த அதிகாரம் மாவட்ட ஆட்சியர்களிடமே இருக்கலாம் என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
திண்டுக்கல்லைச் சேர்ந்த நாகராஜ், தன் மகன் தமிழழகன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட ஆட்சியர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதால், குண்டர் சட்ட உத்தரவுகளில் மாநகர் காவல் ஆணையர் மற்றும் ஐஜி ஆகியோர் கையெழுத்திடும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளவும், அது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் உயர் நீதிமன்றம் ஜூன் 19-ல் உத்தரவிட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், எம்.நிர்மல்குமார் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், “தமிழகத்தில் 38 மாவட்டங்கள் உள்ளன. காவல் துறையில் வடக்கு, மேற்கு, மத்தி மற்றும் தெற்கு என 4 மண்டலங்கள் உள்ளன. இந்த மண்டலங்களை ஐஜிக்கள் நிர்வகிக்கின்றனர். ஒவ்வொரு ஐஜிக்கள் கட்டுப்பாட்டில் 10 மாவட்டங்கள் உள்ளன. தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளர்களின் பணியை மேற்பார்வை செய்வது, அந்த மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு மற்றும் பிற பணிகளில் ஐஜி கவனம் செலுத்த வேண்டியதுள்ளது.
குண்டர் சட்ட உத்தரவுகளில் மாவட்ட ஆட்சியர் கையெழுத்திடுகிறார். இந்த நடைமுறை சீராக உள்ளது. இந்த நடைமுறை தொடர்வதே சரியானதாக இருக்கும். மாவட்ட ஆட்சியர்கள் குண்டர் சட்ட உத்தரவு பிறப்பிப்பதே சரியானதாக இருக்கும். இந்த அதிகாரத்தை ஐஜிக்களுக்கு வழங்க வேண்டியதில்லை. அதிகாரப் பகிர்வு தன்னிச்சையாக, தவறாக குண்டர் சட்டத்தை பயன்படுத்துவதை தடுக்கும். எனவே, சட்டத் திருத்தம் தேவையில்லை என அரசு கருதுகிறது” என்று அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இதை ஏற்று வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.