லக்னோ, ‘பாகிஸ்தானிலிருந்து சட்டவிரோதமாக நம் நாட்டிற்குள் ஊடுருவி, உத்தர பிரதேசத்தில் வசித்து வரும் பெண், உளவாளியா என்பது குறித்து தற்போதைக்கு எதுவும் கூற முடியாது’ என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா, 30, என்ற பெண், ‘பப்ஜி’ என்ற ஆன்லைன் விளையாட்டு வாயிலாக, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சச்சின், 22, என்பவருடன் பழகியுள்ளார்.
மற்றொரு அண்டை நாடான நேபாளம் வழியாக சட்டவிரோதமாக, தன் நான்கு குழந்தைகளுடன் உ.பி., வந்த சீமா, சச்சினை திருமணம் செய்தார்.
இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். சட்டவிரோதமாக நுழைந்ததாக கூறி, சீமாவையும், அவருக்கு உதவியதாக சச்சினையும் போலீசார் கைது செய்தனர். பின், இருவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த பெண்ணை, உளவு பார்ப்பதற்காக பாகிஸ்தான் அனுப்பியதா என்பது தொடர்பாக, உத்தர பிரதேச பயங்கரவாத தடுப்பு படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து, உத்தர பிரதேச சிறப்பு டி.ஜி.பி., பிரஷாந்த் குமார் நேற்று கூறியுள்ளதாவது:
இது, இரு நாட்டுக்கு இடையேயான பிரச்னை. அதனால், முழுமையாக விசாரிக்காமல், எந்த ஆதாரமும் இல்லாமல், அவர் உளவாளியா என்பது குறித்து தெரிவிக்க முடியாது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement