கொழும்பு : ”இலங்கையில், இந்தியாவின் கரன்சியை, உள்ளூர் பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம்,” என, அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நம் அண்டை நாடான இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, கடந்த 20, 21ல், அரசு முறை பயணமாக நம் நாட்டிற்கு வந்தார். புதுடில்லியில் பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேசினார்.
அப்போது, தமிழகத்தின் நாகப்பட்டினம் – இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்தை விரைவில் துவக்குவது, இலங்கைக்குள் யு.பி.ஐ., எனப்படும் ஒருங்கிணைந்த பணப் பரிவர்த்தனையை மேம்படுத்துதல், இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்குதல் உள்ளிட்டவை குறித்து, இரு தலைவர்களும் விவாதித்தனர்.
இந்நிலையில், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவின் இந்தியப் பயணம் குறித்து, கொழும்பில் செய்தியாளர்களிடம் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அலி சப்ரி நேற்று கூறியதாவது:
இலங்கையில், டாலர், யூரோ, யென் ஆகிய கரன்சிகளை ஏற்றுக் கொண்டது போல், இந்தியாவின் கரன்சியையும் உள்ளூர் பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்துவது குறித்து, தீவிரமாக பரிசீலித்து வருகிறோம்.
இந்த நடவடிக்கை, இந்திய சுற்றுலா பயணியர் மற்றும் வணிகர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
திரிகோணமலையில், கூட்டுக் குழு வாயிலாக, சாத்தியமான திட்டங்களைக் கண்டறியும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மட்டுமே இந்தியாவுடன் கையெழுத்திட்டு உள்ளோம்.
இது போன்ற வெளிப்படையான ஒப்பந்தங்களுக்கு, எந்த நாடும் எதிர்ப்பு தெரிவிக்காது என, நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்