Maharashtra Man Wins ₹ 5 Crore While Gambling Online | ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.5 கோடி வென்று ரூ.58 கோடி இழந்த தொழிலதிபர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

நாக்பூர்: மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், தொழிலதிபர் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 5 கோடி வென்று ரூ.58 கோடி இழந்த நிகழ்வு அரங்கேறி உள்ளது. அந்த தொழிலதிபரின் பெயரை வெளியிடவில்லை.

இது தொடர்பாக போலீசார் கூறியதாவது:

பாதிக்கப்பட்ட தொழிலதிபரை, ஆனந்த் என்ற சன்டு நவ்ரத்தன் ஜெயின் என்ற இடைத்தரகர் அணுகி, அதிக வருமானம் கிடைக்கும் எனக்கூறி, ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட அழைத்துள்ளார். முதலில் தொழிலதிபர் ஆர்வம் காட்டவில்லை. இருப்பினும் விடாத ஆனந்த் தொடர்ந்து வலியுறுத்தவே, ஒரு கட்டத்தில் தனது மனதை மாற்றிக் கொண்டு ஹவாலா மூலம் ரூ. 8 லட்சம் அனுப்பி வைத்துள்ளார்.

இதன் பிறகு ஆனந்த், வாட்ஸ் ஆப் மூலம் ஆன்லைன் சூதாட்டத்திற்கான ‛லிங்க்’ ஒன்றை அனுப்பி உள்ளார். அதனை திறந்து பார்த்த போது ரூ.8 லட்சம் தனது பெயரில் டெபாசிட் ஆகி இருந்ததை கண்ட தொழிலதிபர் பிறகு சூதாட்டத்தில் ஈடுபட்டார். முதலில் சிறிது சிறிதாக ரூ. 5 கோடி வரை அவருக்கு வெற்றி கிடைத்தது. பிறகு, அவருக்கு தோல்வி மட்டுமே கிடைத்துள்ளது. இதில், அவருக்கு ரூ.58 கோடி நஷ்டம் ஏற்பட்டது.

இதனால் சந்தேகம் அடைந்த அந்த தொழிலதிபர், ஆனந்த்திடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால், அவர பணத்தை திருப்பி கொடுக்க மறுத்துவிட்டார். இதனையடுத்து அந்த தொழிலதிபர் போலீசில் புகார் அளித்தார். சைபர் கிரைம் போலீசார், ஐபிசி பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து, அந்த இடைத்தரகர் தங்கியிருந்த கோண்டியா மாவட்டத்தில் உள்ள இருப்பிடத்தை கண்டுபிடித்து சோதனை நடத்தினர். அதில் ரூ.14 கோடிக்கும் மேற்பட்ட ரொக்கம் மற்றும் 4 கிலோ தங்க பிஸ்கட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசார் நெருங்கியதை அறிந்த அந்த இடைத்தரகர் அங்கிருந்து தப்பினார். இவ்வாறு போலீசார் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.