போபால்: மத்திய பிரதேசத்தில் கடந்த இரு வாரங்களுக்கு முன்புதான் பழங்குடியின நபர் மீது சிறு நீர் கழித்த அவலம் நடைபெற்றது. இந்த நிலையில், தற்போது தலித் நபர் மீது மலத்தை பூசிய நெஞ்சை பதற வைக்கும் கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு சிக்கல்களை இன்றளவும் எதிர்கொண்டு வருகின்றனர். சாதிய ஏற்றத்தாழ்வுகள் இன்னும் கூட பல இடங்களில் இருந்து கொண்டே தான் இருக்கிறது. பல இடங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோயில்களுக்கு அனுமதிக்க மறுக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. மனித குலத்தின் அவமானமாக இந்த கொடூரங்கள் இன்னும் நீடித்துக் கொண்டு இருப்பது பெரும் வேதனைதான்.
அந்த வகையில், அண்மையில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மத்திய பிரதேசத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக பழங்குடியின இளைஞர் மீது பாஜக எம்.எல்.ஏ.வின் பிரதிநிதியாக இருந்த பிரவேஷ் சுக்லா என்பவர், சிறு நீர் கழித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி காட்டுத்தீயாகப் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
காலை கழுவிய முதல்வர்: பழங்குடியின இளைஞருக்கு நேர்ந்த கொடுரம் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உறுதி அளித்தார். தொடர்ந்து குற்றவாளி மீது தேசியபாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.
முகத்தில் சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடி இளைஞரை போபாலில் உள்ள தனது இல்லத்திற்கு வரவழைத்து பேசிய சிவராஜ் சிங் சவுகான் அவரின் காலை கழுவினார். பின்னர் அவருக்கு மாலை சூட்டி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அவருக்கு இனிப்பு ஊட்டியதோடு, மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.
மற்றொரு அதிர்ச்சி சம்பவம்: மத்திய பிரதேசத்தில் பழங்குடியின இளைஞருக்கு கொடூரம் நடைபெற்று இரு வாரங்களே ஆன நிலையில், மற்றொரு அதிர்ச்சிகர சம்பவம் நடைபெற்றுள்ளது. கொடூரத்தின் உச்சமாக நடைபெற்று இருக்கும் இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:- மத்திய பிரதேச மாநிலம் சத்ரபூர் மாவட்டத்தில் உள்ள பைகுரா கிராமத்தில் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வந்துள்ளது.
கட்டுமான பணியில் தலித் வகுப்பை சேர்ந்த தஷ்ரத் அஹிர்வார் என்பவர் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது ஒபிசி வகுப்பை சேர்ந்த ராம்க்ரிபால் படேல் என்பவர் அருகில் இருந்த அடிபம்ப் ஒன்றில் குளித்து கொண்டு இருந்துள்ளார். கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்த அஹிர்வார் தவறுதலாக தனது கையில் இருந்த கிரீஸ் உடன் ராம்கிரிபால் படேலை தொட்டு விட்டார்.
உடல் முழுவதும் மலம் பூச்சு: இதனால், கோபமான ராம்கிருபால் தான் கையில் வைத்து இருந்த கப்பில் (Mug) மலத்தை எடுத்து வந்து அஹிர்வாரின் உடல், தலை, மற்றும் முகத்தில் பூசியிருக்கிறார். மேலும் சாதிப் பெயரைச் சொல்லியும் அவமானப்படுத்தி இருக்கிறார். கொடூரத்தின் உச்சமாக நடைபெற்ற இந்த சம்பத்தால் வேதனை அடைந்த தஷ்ரத் அஹிர்வார் உள்ளூர் பஞ்சாயத்தில் முறையிட்டு இருக்கிறார்.
ஆனால், பஞ்சாயத்து கூட்டத்தில் நடந்த கொடூரம் என்னவென்றால் பாதிக்கப்பட்ட நபருக்கே ரூ 600 அபராதம் போட்டு இருக்கிறார்கள். இதையடுத்து, போலீஸ் ஸ்டேஷனில் நடந்த சம்பவம் குறித்து அஹிர்வார் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனை சட்டம் ஐபிசி பிரிவு 294, 506 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், கொடூர சம்பவத்தை அரங்கேற்றிய நபரை கைது செய்தனர்.
போலீசார் விளக்கம்: இது குறித்து போலீசார் கூறும் போது, கட்டுமான பணி நடைபெற்று வந்த இடத்திற்கு அருகே குளித்துக் கொண்டு இருந்த படேலிடம் தஷ்ரத் அஹிர்வார் மற்றும் பிற தொழிலாளர்கள் ஜோக் அடித்துக் கொண்டு இருந்து இருக்கின்றனர். அப்போது விளையாட்டாக ஒருவர் மீது ஒருவர் கையில் கிடைத்த பொருட்களை எறிந்து விளையாடி இருக்கிறார்கள். அப்போது, அஹிர்வார் தனது கையில் இருந்த கிரீசை படேல் கைகளில் தடவியிருக்கிறார். உடனே மனித கழிவை தனது கைகளால் எடுத்து வந்த படேல், அஹிர்வார் மீது வீசியிருக்கிறார்” என்றனர்.