நாக்பூர்:மஹாராஷ்டிராவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், ‘ஆன்லைன்’ விளையாட்டில், 5 கோடி ரூபாய் சம்பாதித்தார். அதே நேரத்தில், 58 கோடி ரூபாயை இழந்துள்ளார். அவரை ஏமாற்றிய தரகரை போலீசார் தேடி வருகின்றனர்.
முதலீடு
மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள புனேயைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரை, கோண்டியா நகரைச் சேர்ந்த தரகரான, அனந்த் என்பவர் தொடர்பு கொண்டுள்ளார்.
‘ஆன்லைன் விளையாட்டில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம்’ என, தொழிலதிபருக்கு அனந்த் ஆசை காட்டியுள்ளார். இதை நம்பி, 8 லட்சம் ரூபாயை அந்த தொழிலதிபர் கொடுத்து உள்ளார்.
அந்த தொகை, ஆன்லைன் விளையாட்டில் முதலீடு செய்யப்பட்டுஉள்ளது. தொடர்ந்து சில விளையாட்டுகளில் அந்த தொழிலதிபர் வென்று வந்துள்ளார்.
அந்த வெற்றி போதை தலைக்கேறி, தொடர்ந்து ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு வந்துஉள்ளார்.
ஒரு கட்டத்தில், ஆன்லைன் விளையாட்டு வாயிலாக 5 கோடி ரூபாய் சம்பாதித்ததையும், அதே நேரத்தில், 58 கோடி ரூபாயை இழந்ததையும் தொழிலதிபர் உணர்ந்துஉள்ளார்.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டுள்ளதை புரிந்து கொண்ட அவர், போலீசில் புகார் கொடுத்தார். இதன்படி, கோண்டியா நகரைச் சேர்ந்த அனந்த் வீட்டில், போலீசார் சோதனை நடத்தினர்.
பறிமுதல்
அப்போது அந்த வீட்டில், ௧௪ கோடி ரூபாய் ரொக்கம், நான்கு கிலோ தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தப்பியோடிய அனந்தை போலீசார் தேடி வருகின்றனர். அவர் வெளிநாடு தப்பியிருக்கலாம் என, போலீசார் சந்தேகப்படுகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்