ட்விட்டர் ‘நீலக் குருவி’ லோகோ விரைவில் மாற்றம்: எலான் மஸ்க் தகவல்

கலிபோர்னியா: எலான் மஸ்க் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார். அந்நிறுவனத்தின் சிஇஓ-வாக பொறுப்பேற்ற அவர், பணியாளர்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைத்தார். பணி நடைமுறைகள் சார்ந்து புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தார். பயனாளர்கள் தங்கள் ட்விட்டர் கணக்குகளை அதிகாரப்பூர்வமானதாக மாற்றுவதற்குக் கட்டணம் உட்பட புதிய மாற்றங்களை அவர் அறிவித்தார்.

இந்நிலையில், ட்விட்டரின் லோகோவை மாற்ற இருப்பதாக தற்போது அறிவித்துள்ளார். சிறந்த லோகோ கிடைக்கும்பட்சத்தில் இன்று இரவே ட்விட்டரின் லோகோ மாற்றப்பட்டுவிடும் என்று அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே கடந்த ஏப்ரல் மாதம் ட்விட்டரின் அடையாளமான நீலக் குருவி லோகோவுக்குப் பதிலாக டோஜ்காயின் கிரிப்டோ கரன்சியின் நாய் படத்தை லோகோவாக வைத்தார். எனினும், விரைவிலேயே மீண்டும் நீலக் குருவியை லோகாவாக கொண்டு வந்தார். இந்நிலையில், ட்விட்டர் லோகோவை அவர் நிரந்தரமாக மாற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் எலான் மஸ்க் ட்விட்டரின் சிஇஓ-வாக, லிண்டா யாக்காரினோவை நியமித்தார். அப்போது அவர் ட்விட்டரை ‘எக்ஸ்’ நிறுவனமாக மாற்றும் திட்டம் பற்றி குறிப்பிட்டார். அதாவது ட்விட்டரை, சமூகவலைதளம், மெசேஜிங், பணப் பரிவர்த்தனை என அனைத்து செயல்பாடுகளையும் ஒரே இடத்தில் மேற்கொள்ளும் வகையிலான செயலியாக மாற்ற அவர் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், ட்விட்டரின் லோகாவை மாற்ற இருப்பதாகவும் ட்விட்டரின் பிராண்டை சீரமைப்பு செய்ய இருப்பதாகவும் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு கவனம் ஈர்த்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.