மதுரை: மத்திய அரசின் ஒருங்கிணைப்பில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் மதுரை ‘எய்ம்ஸ்’ தாமதம் ஆவதாகவும், 2028-க்குள் அது செயல்பாட்டுக்கு வரும் எனவும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
மதுரையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம், தமிழக அரசின் 14 கோரிக்கைகள் தொடர்பான மனு அளிக்கப்பட்டது. அதில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை உடனடியாக தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஜப்பானில் உள்ள ஜைக்கா அலுவலகத்துக்குச் சென்று அதன் நிறுவன துணைத் தலைவரை சந்தித்து மதுரை எய்ம்ஸ்க்கு விரைவாக நிதி ஒதுக்க வேண்டுகோள் விடுத்தோம்.
மதுரை ‘எய்ம்ஸ்’ விவகாரத்தில் மத்திய அரசின் ஒருங்கிணைப்பில் குழப்பம் இருந்துள்ளது. அதனாலே இந்த திட்டத்தில் நிதி ஒதுக்குவதில் பிரச்சினைகள் இருந்து வருகின்றன. மதுரை எய்ம்ஸ்’க்கான ஒப்பந்தப்புள்ளி 2024-க்குள் முடிந்துவிடும். மருத்துவமனைக் கட்டிடம் கட்டி முடிக்க 4 ஆண்டுகள் ஆகலாம் என தெரிவித்துள்ளனர். 2028-க்குள் எய்ம்ஸ் வர வாய்ப்புள்ளது.
அதுபோல், கோவை வளர்ந்து வரும் நகரம். அதனால், கோவைக்கான எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜைக்கா நிதி உதவி இல்லாமல் மத்திய அரசே நேரடியாக நிதி ஒதுக்க டேராடூன் மாநாட்டில் மத்திய அமைச்சரிடம் கோரியுள்ளோம். மதுரை ‘எய்ம்ஸ்’-க்கு மத்திய அரசும் முந்தைய மாநில அரசும் போதிய கவனம் செலுத்தாமல் ஜைக்கா மூலம் நிதி ஒதுக்கி தற்போது மதுரை எய்ம்ஸ் பணிகள் தாமதமாகின்றன.
எதிர்காலத்தில் நிச்சயமாக மத்திய அரசு நிதி பங்களிப்பில் ‘கோவை எய்ம்ஸ்க்கான கட்டுமானப் பணிகள் நடைபெறும் என நம்புகிறோம். மதுரை ‘எய்ம்ஸ்’க்கான நிதி பங்களிப்பை மத்திய அரசு கொடுத்திருந்தால் நிச்சயம் அடிக்கல் நாட்டும் பணியோடு நின்று இருக்காது.
64 வயதான நான் 70 முறைக்கு மேல் ரத்ததானம் செய்துள்ளேன். தமிழகம் ரத்த தானம் செய்வதில் முன்பு முதலிடத்தில் இருந்தது. தற்போது மேற்குவங்கம் முதலிடத்தில் உள்ளது. தேசிய அளவில் தமிழகம் 2-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. மீண்டும் முதலிடத்துக்கு வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக ‘உதிரம் 2023’ என்ற தலைப்பில் குருதிக் கொடை விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை அவர் தொடங்கிவைத்தார்.