வேலூர் மாவட்டம், கணியம்பாடி தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளரும், ஒன்றியக் குழுத் துணைத் தலைவருமான கஜேந்திரனுக்கு சமீபத்தில் புதிய நம்பரிலிருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், ‘‘நானொரு ஐ.ஏ.எஸ் அதிகாரி, தலைமைச் செயலகத்திலிருந்து பேசுகிறேன். உங்களைப் பற்றி நிறைய புகார்கள் வந்துக்கொண்டே இருக்கின்றன. உடனடியாக, அடுக்கம்பாறை அடுத்த சாத்துமதுரைப் பகுதிக்குவந்து என்னைச் சந்தியுங்கள்’’ என மிரட்டும் தொனியில் பேசிவிட்டு, அழைப்பைத் துண்டித்தார். இதையடுத்து, கஜேந்திரன் தன்னுடன் 2 பேரை அழைத்துக்கொண்டு சாத்துமதுரைப் பகுதிக்குச் சென்றார்.

ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறிய நபர் பந்தாவான கெட்டப்பில், அங்குக் காத்திருந்தார். வந்தவர்களிடம் தனது விசிட்டிங் கார்ட்டை நீட்டினார். அதில், ‘பெயர் – என்.சுபாஷ், ஐ.ஏ.எஸ்., உள்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் இணைச் செயலாளர், தலைமைச் செயலகம், சென்னை’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, ‘என்னை சென்னையில் வந்து சந்தியுங்கள். வரவில்லையெனில், உங்கள் மீதான புகார்களை வைத்து, உங்கள் பதவிக்கு உலை வைத்துவிடுவேன். உங்களையும் ஒழித்துக்கட்டிவிடுவேன்’ எனவும் சுபாஷ் மிரட்டிவிட்டு அங்கிருந்துச் சென்றார்.
‘எந்தவொரு ஐ.ஏ.எஸ் அதிகாரியும் இவ்வளவு மட்டமாக நடந்துகொள்ள மாட்டார்களே!’ என சந்தேகப்பட்ட தி.மு.க ஒன்றியச் செயலாளர் கஜேந்திரன், உடனடியாக வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து, எஸ்.பி மணிவண்ணன் உத்தரவின்பேரில், போலீஸார் குறிப்பிட்ட செல் நம்பரின் சிக்னலை ஆய்வுசெய்து, சென்னை விருகம்பாக்கத்தில் பதுங்கியிருந்த சுபாஷ் என்ற 29 வயதான இளைஞரை இன்று மடக்கிப் பிடித்து, கைதுசெய்தனர்.

விசாரணையில், சுபாஷ் கொடுத்த தகவல்கள் அனைத்தும் போலியானவை, அவர் ஐ.ஏ.எஸ் அதிகாரியும் கிடையாது. தன்னை ஐ.ஏ.எஸ் அதிகாரி என போலியாகக் காட்டிக்கொண்டு உள்ளாட்சிப் பிரதிநிதிகளை மிரட்டிப் பணம் பறித்துவந்ததும், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்பிருப்பதும், பணம் பறிக்கும் நோக்கத்துடன் தி.மு.க ஒன்றியச் செயலாளர் கஜேந்திரனையும் மிரட்டியது, விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி சுபாஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், அவரை சிறையிலடைத்தனர்.