புதுச்சேரி : ‘புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லுாரிகளில் நடப்பு கல்வியாண்டு முதல், தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படுகிறது’ என துணை வேந்தர் குர்மித்சிங் கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது.
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லுாரிகள் 101ல், இந்தாண்டு முதல் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படுகிறது. அதனுடன் 4 புதிய ஒருங்கிணைந்த பாடங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இளங்கலை படிப்புகள் இனி 4 ஆண்டுகளாகும். ஆனால் அதில் சேருவோர் விரும்பும் நேரத்தில் வெளியேறலாம். ஓராண்டு படித்து முடித்து வெளியேறினால் சான்றிதழ் பெற அனுமதிக்கப்படுகிறது.
பொருளாதார பிரச்னை, உடல் நலம் உள்ளிட்ட ஏதேனும் ஒரு காரணத்திற்காக பாதியில் படிப்பை நிறுத்தும் மாணவர்கள் தங்கள் விருப்பப்படி அல்லது வசதிக்கேற்ப ஏதேனும் ஒரு பல்கலையில் சில ஆண்டுகள் கழித்து கூட படிப்பை தொடரலாம்.
மாணவர்களை அகாடமிக் பாங்க் ஆப் கிரெடிட் போர்ட்டலில் (ஏ.பி.சி.) கணக்கு உருவாக்க இக்கல்விக்கொள்கை அனுமதித்துள்ளது.
ஒரு குறிப்பிட்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் கல்வி பயில திரும்பும் மாணவர், அவர்கள் விட்ட இடத்திலிருந்து படிப்பை தொடரலாம்.
பல கல்வி நிறுவனங்கள் இந்த போர்ட்டலுடன் இணைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி பல்கலைக்கழகம் மற்றும் இணைப்பு கல்லுாரிகள் ‘ஏபிசி போர்ட்டலை’ உருவாக்கும் செயல் முறையை துவங்கியுள்ளன. இது மாணவர் கல்வி இடைநிற்றலை ஊக்குவிப்பதாக அமையாது. பல்வேறு பாடங்களை ஆராய மாணவர்களை ஊக்குவிக்கும்.
புதிய கல்விக்கொள்கை தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. மொழியைத் தேர்ந்தெடுக்க மாணவருக்கு முழு சுதந்திரம் அளிக்கிறது. மேலும், ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளை கற்கும் வாய்ப்பை தருகிறது.
புதிய கொள்கையானது தொழிற்கல்வியை பொதுக் கல்வியுடன் ஒருங்கிணைக்கிறது. புதுச்சேரி மத்திய பல்கலையில் புதுச்சேரி மாநில மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்த கோரிக்கை விடுக்கின்றனர். ஆனால், பல பாட பிரிவுகளில் உள்ளூர் மாணவர்கள் 35 முதல் 40 சதவீதம் பேர் படிக்கின்றனர். எனவே, 25 சதவீதத்திற்குள் கட்டுப்படுத்த வேண்டிய அவசியமில்லை. எப்படி இருந்தாலும் உள்ளூர் மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அமைச்சகத்திற்கு எடுத்து சென்றுள்ளோம்.
இந்தாண்டு முதல் செமஸ்டர் தேர்வுகள் உரிய நேரத்தில் நடத்தப்படும். பல்கலைக்கான நிதியை 10 சதவீதம் உயர்த்தி வழங்க கோரிக்கை விடுத்துள்ளோம். கல்வி தர வரிசை கணக்கீடு பட்டியலில் தற்போது கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை கூடிவிட்டதால், புதுச்சேரி பல்கலை பின்தங்கியதுபோல் தெரிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பதிவாளர் ராஜ்னிஷ் புட்னி, பேராசிரியர்கள் தரணிக்கரசு, ராஜிவ்ஜெயின், மக்கள் தொடர்பு அதிகாரி மகேஷ் உடனிருந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்